லாசேன்:சுவிட்சர்லாந்தில் உள்ள லாசேனில் 'டையமண்ட் லீக்' (diamond league 2024) தடகளப் போட்டிகள் நடைபெற்று வருகிறது. இதில் ஆண்களுக்கான ஈட்டி எறியதல் பிரிவில் இந்தியாவின் வீரர் நீரஜ் சோப்ரா பங்கேற்றார். இதில் நீரஜ் சோப்ராவுக்கு கிடைத்த முதல் வாய்ப்பில் 82.10 மீட்டர் தூரம் மட்டுமே ஈட்டியை எறிந்தார்.
இதன்பின் கிடைத்த 2வது வாய்ப்பில் 83.21 மீட்டர் தூரம் ஈட்டியை எறிந்து 4வது இடத்திலிருந்தார். அடுத்த இரு வாய்ப்புகளில் 83.13, 82.34 மீ மட்டும் எறிந்து ரசிரகர்களுக்கு அதிர்ச்சி கொடுத்தார். இவரை விடவும் ஒலிம்பிக் தொடரில் வெண்கலப் பதக்கம் வென்ற ஆண்டர்சன் பீட்டர்ஸ் 88.49 மீட்டர் தூரம் வீசி முதலிடத்திலும், ஜெர்மனியின் ஜூலியன் 87.08 மீட்டர் தூரம் வீசி 2வது இடத்திலும், உக்ரைனைச் சேர்ந்த ஆர்தர் 83.38 மீட்டர் தூரம் வீசி 3வது இடத்தில் இருந்தனர்.
இதனால் தன்னுடைய கடைசி வாய்ப்பில் 85 மீட்டர் தூரத்திற்கு மேல் ஈட்டி எறிந்தால் மட்டுமே பதக்கம் உறுதி செய்யப்படும் என்ற கட்டாயத்தில் இருந்த நீரஜ் சோப்ரா, 5வது வாய்ப்பில் 89.49 மீ. எறிந்து 2வது இடத்திற்கு முன்னேறினார். இதன் மூலம் வெள்ளிப் பதக்கம் உறுதியானது.
இந்த போட்டியில் கிரனடா நாட்டை சேர்ந்த ஆண்டர்சன் பீட்டர்ஸ் 90.61 மீ வீசி தங்கப் பதக்கம் வென்றார். ஜெர்மனியின் ஜூலியன் வெபர் (87.08 மீ) வெண்கலம் வென்றார். ஒலிம்பிக் போட்டியில் தங்கம் வென்ற பாகிஸ்தானின் அர்ஷத் நதீம், இப்போட்டியில் விளையாடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
தொடர்ந்து முன்னேறும் நீரஜ்: ஒலிம்பிக் தொடரிலேயே நீரஜ் சோப்ரா 89.45 மீட்டர் தூரம் தான் வீசி வெள்ளிப் பதக்கம் வென்று இருந்தார். இருப்பினும் 90 மீட்டருக்கு மேல் அவரால் ஈட்டி எறியமுடியவில்லை என்ற வருத்தம் ரசிகர்கள் இடையே இருந்து வந்தது. கடந்த போட்டியைக் காட்டிலும் இந்த முறை அதிக தூரம்(89.49 மீ) வீசி மீண்டும் வெள்ளியைக் கைப்பற்றியுள்ளார்.
ஒவ்வொரு போட்டிகளிலும் முன்னேற்றம் கண்டு வரும் நீரஜ் கூடிய விரைவில் 90 மீ ஈட்டி எறிந்து புதிய மைல்கல்லை படைப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது. அதேபோல் 2018ஆம் ஆண்டு ஆஸ்ட்ராவா லீக் தொடருக்கு பின் நீரஜ் சோப்ரா பங்கேற்ற அத்தனை போட்டிகளிலும் டாப் 3ல் முடித்திருக்கின்றார் என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க:அல்டிமேட் டேபிள் டென்னிஸ் தொடர் துவக்கம்: ஜெய்ப்பூர் அணியை வீழ்த்தி கோவா அணி அபார வெற்றி!