சென்னை :95வது அகில இந்திய எம்சிசி-முருகப்பா தங்கக் கோப்பை ஹாக்கி போட்டியில் கடைசி லீக் போட்டிகள் நேற்று (செப் 26) நடைபெற்றது. முதல் போட்டியில் இந்திய ஆயில் கார்பரேஷன் அணியும், போபால் அணியும் இரண்டாவது போட்டியில் ரயில்வே அணியும், தமிழ்நாடு ஹாக்கி அணியும் மோதின.
முதலில் நடைபெற்ற போட்டியில் ஐஓசி அணியும் போபால் அணியும் மோதின. இதில் தொடக்கம் முதல் இரு அணி வீரர்களும் ஆக்ரோஷமாக விளையாடினர். மேலும், ஐஓசி அணியின் ரோஷன் 8 நிமிடத்திலும், அஃபான் யுசப் 10 நிமிடத்திலும் கோல் அடித்து தங்கள் அணியை 2-0 என்ற கணக்கில் முன்னிலைப்படுத்தினர்.
பின்னர் சுதாரித்த போபால் அணி வீரர்கள் கோல் அடிக்க 3-2 என்ற கணக்கில் போபால் அணி முன்னிலை பெற்றது. பரபரப்பாக சென்ற ஆட்டத்தின் 29வது நிமிடத்தில் ஐஓசி அணி வீரர் தல்விந்தர் சிங் ஒரு கோல் அடித்து ஆட்டத்தைதை 3-3 என்ற கணக்கில் சமன் செய்தார்.
ஆட்டம் சமனில் சென்றுக்கொண்டு இருக்கும் போது போபால் அணியின் பவன் குமார் மீண்டும் 35வது நிமிடத்தில் கோல் அடிக்க ஆட்டம் 4-3 என்ற கணக்கில் ஆட்டம் போபால் அணி பக்கம் சென்றது. அதனைத்தொடர்த்து 43வது நிமிடத்தில் போபால் அணி வீரர் பிரமோத் கோல் அடிக்க ஆட்டம் 5-3 என்ற கணக்கில் போபால் அணி முன்னிலை பெற்றது.
வெற்றிபெற வேண்டும் என்ற முனைப்பில் ஆடிக்கொண்டு இருந்த போபால் அணியை தடுக்கும் வகையில் ஐஓசி அணியின் சுமித் குமார் 45வது நிமிடத்திலும், மண்ப்ரீத் 47வது நிமிடத்திலும் கோல் அடித்து ஆட்டத்தை 5-5 என்ற கணக்கில் சமன் செய்தனர். ஆட்டம் முடிவில் 5-5 என்ற கணக்கில் சமன் ஆனது. ஐஓசி அணி தனது கடைசி லீக் போட்டியை மூன்று வெற்றிகள் மற்றும் ஒரு டிராவுடன் முடித்து 10 புள்ளிகளுடன் B பிரிவில் முதல் இடம் பிடித்தது.