தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / sports

முருகப்பா தங்கக் கோப்பை ஹாக்கி; மகாராஷ்டிராவை வீழ்த்தி வெற்றிக் கணக்கை தொடங்கிய தமிழ்நாடு! - Murugappa Gold Cup Hockey - MURUGAPPA GOLD CUP HOCKEY

முருகப்பா தங்கக் கோப்பை ஹாக்கி தொடரில் தமிழ்நாடு அணி 4-1 என்ற கோல் கணக்கில் மகாராஷ்டிராவை வீழ்த்தி அபார வெற்றி பெற்றது.

ஹாக்கி வீரர்கள்
ஹாக்கி வீரர்கள் (Credits - ETV Bharat Tamil Nadu)

By ETV Bharat Tamil Nadu Team

Published : Sep 22, 2024, 6:45 AM IST

சென்னை:95வது MCC முருகப்பா தங்கக் கோப்பை அகில இந்திய ஹாக்கி தொடர் சென்னையில் நடைபெற்று வருகிறது. இந்த தொடரில் நேற்று (சனிக்கிழமை) நடைபெற்ற முதல் ஆட்டத்தில் தமிழ்நாடு ஹாக்கி அணி - மகாராஷ்டிரா அணியை எதிர்கொண்டது.

விறுவிறுப்பாக நடைபெற்ற இந்த ஆட்டத்தின் 15வது நிமிடத்தில், தமிழ்நாடு அணியின் சோமன்னாவுக்கு கிடைத்த பெனால்டி கார்னரை கோலாக மாற்றி புள்ளிக் கணக்கை தொடங்கினார். இதனையடுத்து, சுதாரித்து ஆடிய மகாராஷ்டிரா அணி, ஆட்டத்தின் 26வது நிமிடத்தில் கோல் அடிக்க 1-1 என்ற கணக்கில் இரு அணிகளும் சமநிலையில் இருந்தது.

பின்னர் உத்வேகத்துடன் செயல்பட்ட தமிழ்நாடு அணி 29வது நிமிடத்தில் சண்முகவேல் ஒரு பீல்டு கோல் அடித்தார். இதனால் முதல் பாதி முடிவில் 2-1 என தமிழ்நாடு அணி முன்னிலை வகித்தது. பின்னர், இரண்டாவது பாதி ஆட்டத்தில் தமிழ்நாடு அணி மகாரஷ்டிரா அணிக்கு எதிராக தனது ஆதிக்கத்தைச் செலுத்தியது.

பரபரப்பாக சென்ற ஆட்டத்தில் தமிழ்நாடு அணியின் அபிஷேக் 33வது நிமிடத்தில் ஒரு பீல்டு கோல் அடித்து ஸ்கோரை 3-1 என கொண்டு வந்தார். அவரைத் தொடர்ந்து 50வது நிமிடத்தில் பாலச்சந்தர் மற்றொரு கோல் அடித்து தமிழ்நாடு அணியை 4-1 என்ற கணக்கில் வெற்றி பெறச் செய்தார்.

ஐஓசி த்ரில் வெற்றி:இரண்டாவதாக நடைபெற்ற ஆட்டத்தில் இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் லிமிடெட் அணி 3-2 ஆட்டத்தின் கோல் கணக்கில் கர்நாடகா ஹாக்கி அணியை வீழ்த்தியது. போட்டி தொடங்கியது முதலே இரு அணி வீரர்களும் விறுவிறுப்பாக செயல் பட்டனர். ஆட்டத்தின் முதல் ஏழு நிமிடங்களில் இரு அணிகளும் ஒவ்வொரு கோல் அடித்தது.

அதில், ஐஓசி அணியின் தல்விந்தர் சிங் பெனால்டி கார்னரில் இருந்து வெளியேறி பந்தை லாவகமாக இரண்டாவது நிமிடத்தில் கோலாக மாற்றினார். அவரைத் தொடர்ந்து கர்நாடக அணியின் அபாரன் சுதேவ் கோல் அடித்து ஆட்டத்தை சமன் செய்தார். இதனைத் தொடர்ந்து இரு அணி வீரர்களும் கோல் அடிக்கும் முனைப்பில் விளையாடினர்.

அதில் 43வது நிமிடத்தில் ஐஓசி அணியின் ஆர்மான் குரேஷி கோல் அடித்து ஆட்டத்தை தங்கள் பக்கம் திருப்பினார். 53வது நிமிடத்தில் கர்நாடக அணியில் தேஷ் பூவையா கோல் அடித்து ஆட்டத்தை 2-2 என சமன் செய்தார். பின்னர், சுதாரித்த ஐஓசி அணி ஆட்டத்தை வேகப்படுத்தியது.

ஆட்டத்தின் இறுதியில் பெனால்டி ஸ்ட்ரோக்கின் மூலம் குல்ஜிந்தர் கோல் அடிக்க ஐஓசி த்ரில் வெற்றி பெற்றது. இதனையடுத்து, நேற்று நடைபெற்ற 3வது ஆட்டத்தில் இந்திய ராணுவம் அணியும் - ரயில்வே விளையாட்டு மேம்பாட்டு வாரிய அணியும் மோதியது. இதில் இரு அணிகளும் தலா 2 கோல்களை கோல் அடித்து ஆட்டத்தை டிரா செய்தது.

இதையும் படிங்க:மேகமூட்டத்தால் தடைபட்ட Ind vs Ban டெஸ்ட் போட்டி.. 357 இலக்குடன் நாளை தொடர்கிறது வங்கதேச அணி!

ABOUT THE AUTHOR

...view details