சென்னை:95வது அகில இந்திய எம்சிசி-முருகப்பா தங்கக் கோப்பை ஹாக்கி தொடர் சென்னையில் நடைபெற்று வருகிறது. இந்நிலையில், நேற்று 2 போட்டிகள் நடைபெற்றது. இதன் முதல் போட்டியில் ரயில்வே விளையாட்டு மேம்பாட்டு வாரிய அணி (ஆர்எஸ்பிபி) 3-2 என்ற கோல் கணக்கில் மகாராஷ்டிரா அணியை வீழ்த்தி வெற்றி பெற்றது.
ஆட்டம் தொடங்கிய 13வது நிமிடத்தில் ரயில்வே அணியின் யுவராஜ் வால்மீகி சிறப்பாக விளையாடி முதல் கோலை பதிவு செய்தார். தொடர்ந்து, அதே அணியைச் சேர்ந்த சிம்ரன்ஜோத் சிங், 40வது நிமிடத்தில் மற்றொரு சிறப்பான ஃபீல்டு கோல் அடித்தார். அவரைத் தொடர்ந்து சிவம் ஆனந்த் ஒரு கோல் அடிக்க, முதல் பாதி நேர முடிவில் 3-0 என்ற கணக்கில் முன்னிலை பெற்றது.
கோல் அடிக்க முடியாமல் திணறிய மகாராஷ்டிராவின் ரோஹன் பாட்டீல் 59வது நிமிடத்தில் பெனால்டி கார்னர் மூலம் அணிக்கு முதல் கோல் அடித்து நம்பிக்கை கொடுத்தார். முதல் கோல் அடித்து ஒரு நிமிடம் கழித்து வெங்கடேஷ் கெஞ்சே மற்றொரு கோல் அடிக்க, 2-3 என்ற கணக்கில் ஆட்டம் நகர்ந்தது. இரண்டாம் பாதி ஆட்டம் முழுவதும் தொடர்ந்து போராடிய மகாராஷ்டிர அணியால் இரண்டு கோல் மட்டுமே அடிக்க முடிந்தது. இதனால் ஆட்டத்தின் முடிவில் ரயில்வே அணி 3-2 என்ற கணக்கில் வெற்றி பெற்றது.