கோவை:கோயம்புத்தூர் மாவட்டம் அவினாசி சாலையில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரி மைதானத்தில் புச்சி பாபு கிரிக்கெட் தொடர் நடைபெற்று வருகிறது. நேற்று (ஆக.27) தொடங்கிய ஆட்டத்தில் தமிழ்நாடு லெவன் அணி - மும்பை அணியை எதிர்கொண்டது. டாஸ் வென்ற தமிழ்நாடு லெவன் அணியின் கேப்டன் சாய் கிஷோர் பேட்டிங்கை தேர்வு செய்தார்.
அதன்படி முதல் இன்னிங்சில் தமிழ்நாடு லெவன் அணி 117.3 ஓவர்களில் 379 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. அதிகபட்சமாக தமிழ்நாடு லெவன் அணியில் பூபதி வைஷண குமார் 82 ரன்களும், பிரதோஷ் ரஞ்சன் பவுல் 65 ரன்கள், பாபா இந்திரஜித் 61 ரன்கள் குவித்து அணியை நல்ல நிலைக்கு கொண்டு சென்றனர்.
கடைசி கட்டத்தில் அஜித் ராம் அபாரமாக விளையாடி 53 ரன்கள் குவித்து அணி நல்ல ஸ்கோரை எட்ட உதவினார். அஜித் ராமின் அபார ஆட்டத்தின் உதவியுடன் தமிழ்நாடு லெவன் அணி 117.3 ஓவர்களில் 379 ரன்கள் குவித்தது. தொடர்ந்து மும்பை அணி முதல் இன்னிங்சில் களமிறங்கியது.
மும்பை அணியில் யாருடைய ஆட்டம் சொல்லிக் கொள்ளும் அளவுக்கு பெரிதாக அமையவில்லை. தமிழ்நாடு லெவன் பவுலர்களின் பந்துவீச்சுக்கு ஈடுகொடுக்க முடியாமல் அடுத்தடுத்து ஆட்டம் இழந்து திணறினர். தொடக்க வீரர் முஷிர் கான் 16 ரன்களில் ஆட்டமிழந்தார். அடுத்து களமிறங்கிய ஸ்ரேயாஸ் ஐயர் வெறும் 2 ரன்களில் ஆட்டமிழந்து வெளியேறினார்.