சென்னை: தமிழகத்தில் மத்திய, மாநில மருத்துவக் காப்பீட்டுத் திட்டங்கள் தனியாா் நிறுவனங்களின் மருத்துவக் காப்பீட்டின் கீழ் தற்போது பெரும்பாலும் அலோபதி மருத்துவ முறைகளுக்கு மட்டுமே சிகிச்சை பெற முடிகிறது. இந்நிலையில் ஆயுஷ் மருத்துவ சிகிச்சைகளையும், மருத்துவக் காப்பீட்டின் கீழ் பெறுவதற்கான நடவடிக்கையை மத்திய ஆயுஷ் அமைச்சகம் முன்னெடுத்துள்ளது.
இந்த நிலையில், தாம்பரம் தேசிய சித்த மருத்துவ நிறுவனமும், மத்திய ஆயுஷ் அமைச்சகமும் இணைந்து தாம்பரம் தேசிய சித்த மருத்துவமனையில் தமிழ்நாடு, ஆந்திரா, கர்நாடகா, கேரளா, தெலங்கனா, புதுச்சேரி ஆகிய மாநிலங்களில் உள்ள ஆயுஷ் மருத்துவமனைகளை காப்பீட்டு திட்டத்தின் கீழ் இணைப்பதற்கான விழிப்புணர்வு நிகழ்ச்சி நடத்தியது.
இதில் ஆயுஷ் மருத்துவமனை உரிமையாளர்கள், மருத்துவக் காப்பீட்டு நிறுவன நிர்வாகிகள், மத்திய ஆயுஷ் அமைச்சக ஆலோசகர், அதிகாரிகள் மற்றும் மருத்துவர்கள், பேராசிரியர்கள், மாணவர்கள், முகவர்கள் ஆகியோர் கலந்து கொண்டு கொண்டனர்.
இந்த நிகழ்ச்சியில் மக்களுக்கு பயனுள்ள வகையில், ஆயுஷ் மருத்துவமனைகளை காப்பீட்டு திட்டத்தின் கீழ் கொண்டுவரப்படுவது குறித்தும், காப்பீட்டு திட்டத்தை எவ்வாறு நடைமுறைப்படுத்துவது என்பது குறித்தும் உரையாற்றினர்.
இதன் தொடர்ச்சியாக, தாம்பரம் தேசிய சித்த மருத்துவ நிறுவனத்தின் இயக்குனர் மீனாகுமாரி ஈடிவி பாரத் தமிழ்நாடு ஊடகத்திற்கு அளித்த பேட்டியில், "மத்திய ஆயுஷ் அமைச்சகத்தின் கீழ் உள்ள ஆயுஷ் மருத்துவமனைகள் அனைத்தையும் மருத்துவக் காப்பீட்டு திட்டத்தின் கீழ் கொண்டு வருவதற்கான முயற்சியில் மத்திய அரசு ஈடுபட்டு வருகிறது.
இதையும் படிங்க : "ரூ.115 கோடிக்கு புரிந்துணர்வு ஒப்பந்தங்கள்" - அமைச்சர் தா.மோ.அன்பரசன் பெருமிதம்!
மருத்துவக் காப்பீட்டு திட்டத்தில் மக்களுக்கு எந்தளவு பயனுள்ள வஅகையில் ஆயுஷ் மருத்துவமனைகளை கொண்டுவர முடியும் என்ற வழிகாட்டுதல்களையும், நெறிமுறைகளையும் மத்திய ஆயுஷ் அமைச்சகத்தின் அதிகாரிகள் மற்றும் காப்பீட்டு நிறுவனத்தின் அலுவலர்கள் இன்று நடைபெற்ற நிகழ்ச்சியின் மூலம் தெரிவித்துள்ளனர்.
அடுத்த கட்ட நடவடிக்கையாக, தாம்பரம் தேசிய சித்த மருத்துவ நிறுவனமும் மக்களுக்கு பயனளிக்கும் வகையில் மருத்துவக் காப்பீட்டு திட்டத்தின் கீழ் வர இருக்கிறது. அதற்கான பணிகளும் நடைபெற்று வருகிறது. இன்று நடைபெற்ற இந்த விழிப்புணர்வு நிகழ்ச்சியில் 400க்கும் மேற்பட்டோர் நேரிலும், ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் ஆன்லைன் மூலமாகவும் கலந்து கொண்டுள்ளனர். இது மிகப்பெரிய மாற்றத்தை மருத்துவத்துறையில் ஏற்படுத்தும் மற்றும் மக்களுக்கும் இது பயனுள்ள திட்டமாக இருக்கும் என நம்பப்படுகிறது.
இதுமட்டுமல்லாது, மருத்துவக் காப்பீட்டு திட்டத்தின் கீழ் ஆயுஷ் மருத்துவமனைகளில் எந்தெந்த நோய்களுக்கான சிகிச்சை முறைகள் வழங்குவது என்பது குறித்தும், எத்தனை நாட்கள் சிகிச்சை வழங்க வேண்டும் என்பது குறித்தும், எந்த மாதிரியான மருத்துவ வசதிகளை பெற முடியும் என்பது குறித்தும் வழிகாட்டுதல்களை முடிவெடுத்தபின் மத்திய அரசு இது குறித்த அறிவிப்பை வெளியிடும். அதன் பிறகு, இந்த திட்டம் நடைமுறைக்கு வரும்.
அதேபோல, அலோபதி மருத்துவக் காப்பீடு திட்டத்தின் கீழ் இருக்கும் கட்டணத்தை விட மிகவும் எளிமையான மற்றும் குறைவான கட்டணம் தான் ஆயுஷ் மருத்துவக் காப்பீடு திட்டங்களில் இருக்கும். இதில், மருந்துகளும் குறைவான விலையில் தான் உள்ளது. நிச்சயம் மக்களுக்கு பயனுள்ளதாக இந்த திட்டம் இருக்கும்" என்று கூறினார்.
ஈடிவி பாரத் வாட்ஸ்அப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்