ஐதராபாத்: இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்ட நியூசிலாந்து அணி 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் கிரிக்கெட் தொடரில் விளையாடியது. இதில் டெஸ்ட் தொடரை 3-க்கு 0 என்ற கணக்கில் கைப்பற்றிய நியூசிலாந்து அணி, இந்தியாவை அதன் சொந்த மண்ணில் முதல் முறையாக ஒயிட் வாஷ் செய்து வரலாற்று சாதனை படைத்தது.
இந்நிலையில், இந்தியாவுக்கு எதிரான மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடருக்கு முன்னதாக நியூசிலாந்து பேட்ஸ்மேன் ரச்சின் ரவீந்திராவை தங்கள் அகாடமியில் பயிற்சி பெற அனுமதித்ததாக முன்னாள் இந்திய வீரர் ராபின் உத்தப்பா சென்னை சூப்பர் கிங்ஸ் அணி நிர்வாகத்தை கடுமையாக சாடியுள்ளார்.
ராபின் உத்தப்பா தனது யூடியூப் சேனலில் வெளியிட்ட வீடியோவில், "ரச்சின் ரவீந்திரா இங்கு வந்து சென்னை சூப்பர் கிங்ஸ் அகாடமியில் பயிற்சி மேற்கொண்டார். சென்னை சூப்பர் கிங்ஸ் ஒரு அற்புதமான அணியாக உள்ளது, அது எப்போதும் அதன் வீரர்களைக் கவனித்துக் கொள்ளும். ஆனால் ஒரு வெளிநாட்டு வீரர் இந்திய அணியை எதிர்த்து விளையாடும் போது, அவர்களுக்கு பயிற்சி அளிக்கும்போது, நாட்டின் நலன் முன்னோக்கி இருக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.
கடந்த செப்டம்பர் மாதம் ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிரான டெஸ்ட் போட்டிக்கு முன்னதாக சென்னை சூப்பர் கிங்ஸ் அகாடமியில் ரச்சின் ரவீந்திரா பயிற்சி பெற்றார். ஆனால் ஆப்கானிஸ்தானுக்கு எதிராக விளையாட அவருக்கு வாய்ப்பு கிடைக்கவில்லை. இருந்தாலும் இந்தியாவுக்கு எதிரான மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் போது அவருக்கு இந்த பயிற்சி உதவியது.
அக்டோபர் 16 முதல் 20 வரை பெங்களூரு சின்னசாமி ஸ்டேடியத்தில் நடந்த முதல் டெஸ்டில் ரச்சின் ரவீந்திரா முதல் இன்னிங்ஸில் சதம் அடித்தும் இரண்டாவது இன்னிங்சில் ஆட்டமிழக்காமல் 39 ரன்களும் விளாசியிருந்தார். மேலும் இது குறித்து உத்தப்பா கூறும்போது, "எப்பொழுதும் தங்கள் வீரர்களை கவனித்துக் கொள்வதில் எனக்கு ஆச்சரியமில்லை.
நான் சென்னை அணியை முற்றிலும் நேசிக்கிறேன், ஆனால் நாடு என்று வரும்போது, ஒரு கோடு இருக்க வேண்டும்" என்றார். இந்தியாவுக்கு எதிரான மூன்று டெஸ்ட் போட்டிகளிலும் நியூசிலாந்து அணி வெற்றி பெறுவதற்கு ரச்சின் ரவீந்திரா முக்கிய காரணமாக இருந்தார். பெங்களூருவில் நடந்த தொடக்க ஆட்டத்தில் நியூசிலாந்து அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
புனேவில் மைதானத்திலும், மும்பை வான்கடே மைதானத்திலும் நடந்த அடுத்த இரண்டு ஆட்டங்களில் முறையே 113 ரன்கள் மற்றும் 26 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியாவை வீழ்த்தியது நியூசிலாந்து அணி. இந்தியாவில் இந்த வரலாற்று வெற்றியை பெற்ற பிறகு, அடுத்த ஆண்டு லார்ட்ஸில் நடக்கும் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டிக்கு தகுதி பெறும் முனைப்பில் நியூசிலாந்து இருப்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: பாலின சர்ச்சை... மருத்துவ அறிக்கை விவகாரத்தில் சட்ட நடவடிக்கை! இமானே கெலிப் அதிரடி முடிவு!