ஐதராபாத்: பாரீசில் நடைபெற்ற ஒலிம்பிக் போட்டியில் பெண்கள் பிரிவில் அல்ஜீரியா குத்துச்சண்டை வீராங்கனை இமானே கெலிப் தங்கம் வென்றார். முன்னதாக அவர் பெண் அல்ல என்றும் ஆணுக்கான குணாதிசயங்களை கொண்டு இருப்பதாக சக வீராங்கனை அளித்த புகார் சர்ச்சையை கிளப்பியது.
இருப்பினும், அவர் தொடர்ந்து விளையாட சர்வதேச ஒலிம்பிக் சங்கம் அனுமதி அளித்த நிலையில், பெண்களுக்கான 66 கிலோ எடைப் பிரிவின் இறுதிப் போட்டியில் கலந்து கொண்டு தங்கப் பதக்கமும் வென்றார். இந்நிலையில், இமானே கெலிப் ஆண் என்பது குறித்த அதிர்ச்சிகர மருத்துவ அறிக்கையை பிரான்ஸ் நாட்டை சேர்ந்த பத்திரிகையாளர் Djaffar Ait Aoudia என்பவர் வெளியிட்டார்.
கடந்த 2023ஆம் ஆண்டு ஜூன் மாதம் ஹார்மோன் தொடர்பான பிரச்சினைகளை ஆய்வு செய்யும் மருத்துவர்கள் Soumaya Fedala மற்றும் Jacques Young என்பவர்களின் மருத்துவ அறிக்கையின் படி இமானே கெலிப் ஆண் குணாதிசயங்களை கொண்டு இருப்பதாக குற்றம் சாட்டினார். மேலும், இமானே கெலிப்பின் உடலில் ஆண்களுக்கான விரைப்பை மற்றும் எக்ஸ் ஒய் க்ரோமோசோம் உள்ளிட்ட மரபியல் ரீதியலான மாற்றங்கள் இருப்பது கண்டறியப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது.
மேலும் இமானே கெலிப் 5 ஆல்பா ரிடக்டேஸ் பற்றாக்குறை எனப்படும் ஒருவித மரபியல் பிரச்சினையுடன் இருப்பதாகவும் சொல்லப்பட்டது. பாரீசில் உள்ள கிரெம்ளின் பைசெட்ரே மருத்துவமனை மற்றும் அல்ஜீரியாவில் உள்ள மொஹமட் லாமைன் டெபாகைன் மருத்துவமனையின் நிபுணர்களால் கடந்த 2023ஆம் ஆண்டு இந்த அறிக்கை தயாரிக்கப்பட்டதாக பிரான்ஸ் பத்திரிகையாளர் கூறி இருந்தார்.
இந்நிலையில், மருத்துவ அறிக்கைகளை வெளியிட்டவர்கள் மீது இமானே கெலிப் சட்ட ரீதியிலான நடவடிக்கை எடுக்க உள்ளதாக சர்வதேச ஒலிம்பிக் கவுன்சில் தெரிவித்துள்ளது. மேலும், சட்ட நடவடிக்கை மற்றும் அது தொடர்பான ஊடக கேள்விகளுக்கு தங்களால் தற்போது பதிலளிக்க முடியாது என சர்வதேச ஒலிம்பிக் கவுன்சில் தெரிவித்துள்ளது.
ஏற்கனவே பாரீஸ் ஒலிம்பிக் போட்டியில் தனக்கு எதிராக பாலியல் துஷ்பிரயோக கருத்துகளை வெளியிட்டவர்கள் மீது இமானே கெலிப் ஆன்லைன் மூலம் புகார் அளித்து இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. கடந்த 2023ஆம் ஆண்டு டெல்லியில் நடைபெற்ற உலக சாம்பியன்ஷிப் தங்க பதக்கத்திற்கான போட்டியில் இருந்து சர்வதேச குத்துச்சண்டை சம்மேளனம், இமானே கெலிப்பை தடை செய்தது.
இருப்பினும், பாரீஸ் ஒலிம்பிக் கமிட்டி, சர்வதேச குத்துச்சண்டை சங்கத்தின் பரிந்துரைகளை ஏற்காத காரணத்தால் இமானே கெலிப் பாரீஸ் ஒலிம்பிக் போட்டியில் 66 கிலோ எடைப் பிரிவின் இறுதிப் போட்டியில் பங்கேற்று தங்கம் பதக்கம் வென்றார். இமானே கெலிப் தொடர்பான மருத்துவ அறிக்கை வெளியான நிலையில், அவரிடம் உள்ள ஒலிம்பிக் தங்கப் பதக்கத்தை பறிக்க வேண்டும் என விளையாட்டு வீரர்கள், ரசிகர்கள் சமூக வலைதளத்தில் பதிவிட்டு வந்தது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: பாலினத்தை மறைத்து பதக்கம் வென்றாரா இமானே கெலிப்! மருத்துவ அறிக்கையில் அதிர்ச்சி தகவல்! பதக்கம் திரும்பப் பெறப்படுமா?