சென்னை: இந்தியாவின் வலுவான கிளாசிக்கல் போட்டியான சென்னை கிராண்ட் மாஸ்டர்ஸ் செஸ் போட்டியின் 2-வது சீசன் சென்னை கோட்டூர்புரத்தில் உள்ள அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் நடைபெற்று வருகிறது. இத்தொடரின் 3-வது நாளான நேற்று (நவ.07) 3-வது சுற்று போட்டிகள் நடைபெற்றன.
கிராண்ட் மாஸ்டர்ஸ்: மாஸ்டர்ஸ் பிரிவில் முதல் போர்டில் ஈரானின் அமீன் தபதாபேயி, பிரான்ஸின் மாக்சிம் வாச்சியர் லாக்ரேவுடன் மோதினார். இதில் கருப்பு காய்களுடன் விளையாடிய அமீன் தபதாபேயி 38-வது நகர்த்தலின் போது வெற்றி பெற்றார்.
2-வது போர்டில் இந்தியாவின் விதித் குஜராத்தி, அரவிந்த் சிதம்பரத்தை எதிர்கொண்டார். இந்த ஆட்டம் 48-வது நகர்த்தலின் போது டிராவில் முடிவடைந்தது. 3-வது போர்டில் அமெரிக்காவின் லெவோன் அரோனியனும் ஈரானின் பர்ஹமக்சூட்லூவும் மோதினர். இதில் வெள்ளை காய்களுடன் விளையாடிய லெவோன் அரோனியன் 46-வது நகர்த்தலின் போது வெற்றி பெற்றார்.
4-வது போர்டில் இந்தியாவின் நட்சத்திர வீரர் அர்ஜுன் எரிகைசி, செர்பியாவின் அலெக்ஸி சரானாவை எதிர்த்து விளையாடினர். கருப்பு காய்களுடன் விளையாடிய அர்ஜூன் எரிகைசி 37-வது காய் நகர்த்தலின் போது வெற்றி பெற்றார். இந்த வெற்றியின் மூலம் லைவ் ரேட்டிங்கில் அர்ஜுன் எரிகைசி 2805.8 புள்ளிளும் உலகத் தரவரிசையில் 2-வது இடத்துக்கு முன்னேறியுள்ளார்.
Arjun Erigaisi just doesn't stop winning. He becomes the World no.2 now - with a live rating of 2805.8! Arjun defeated Aleksey Sarana in a wild encounter in the 3rd round of the Chennai Grand Masters 2024 to become the World no.2 player.
— ChessBase India (@ChessbaseIndia) November 7, 2024
Arjun is now co-leading the Chennai Grand… pic.twitter.com/qJdMnYnppw
7 சுற்றுகள் கொண்ட இந்த தொடரில் 3 சுற்றுகளின் முடிவில் அமீன் தபதாபேயி, அர்ஜுன் எரிகைசி ஆகியோர் தலா 2.5 புள்ளிகளுடன் முதலிடத்தை பகிர்ந்த கொண்டுள்ளனர். லெவோன் அரோனியன் 2 புள்ளிகளுடன் 3-வது இடத்திலும், அரவிந்த் சிதம்பரம் 1.5 புள்ளிகளுடன் 4-வது இடத்திலும், மாக்சிம் வாச்சியலாக்ரேவ் 1.5 புள்ளிகளுடன் 5-வது இடத்திலும், பர்ஹாம் மக்சூட்லூ 1 புள்ளியுடன் 6-வது இடத்திலும், அலெக்ஸி சரானா 0.5 புள்ளிகளுடன் 7-வது இடத்திலும், விதித் குஜராத்தி 0.5 புள்ளிகளுடன் 8-வது இடத்திலும் உள்ளனர்.
இதையும் படிங்க: சென்னை கிராண்ட் மாஸ்டர்ஸ் செஸ் சாம்பியன்ஷிப்: 2வது சுற்றில் விதித் குஜ்ராத்தி தோல்வி!
சேலஞ்சர்ஸ் பிரிவு: சேலஞ்சர்ஸ் பிரிவில் 3-வது நாளான நேற்று 3-வது சுற்று ஆட்டங்கள் நடைபெற்றன. இதில் முதல் போர்டில் ரவுனக் சத்வானி, லியோன் மெண்டோன்காவுடன் மோதினார். இந்த ஆட்டம் 51-வது நகர்த்தலின் போது டிராவில் முடிவடைந்தது. 2-வது ஒலிம்பியாட் தொடரில் தங்கம் வென்ற பெண்கள் பிரிவு வீராங்கனை ஆர். வைஷாலி, பிரனேஷுடன் பலப்பரீட்சை நடத்தினார். இதில் கருப்பு நிற காய்களுடன் விளையாடிய வைஷாலி 46-வது நகர்த்தலின் போது தோல்வி அடைந்தார்.
3-வது போர்டில் கார்த்திக்கேயன் முரளி, பிரணவை எதிர்கொண்டார். இதில் வெள்ளை காய்களுடன் விளையாடிய பிரணவ் 69-வது காய் நகர்த்தலின் போதுவெற்றி கண்டார். இந்த ஆட்டம் சுமார் 4 மணி நேரத்துக்கு மேல் நடைபெற்றது. 4-வது போர்டில் ஹரிகா துரோணவல்லி, அபிமன்யு புராணிக்கை சந்தித்தார். இதில் வெள்ளை காய்களுடன் விளையாடிய ஹரிகா துரோணவல்லி 51-வது நகர்த்தலின் போது ஆட்டத்தை டிரா செய்தார். தொடர்ச்சியாக இரு ஆட்டங்களில் தோல்வியை சந்தித்த ஹரிகா இந்த டிராவின் மூலம் தனது புள்ளி கணக்கை தொடங்கினார்.
7 சுற்றுகள் கொண்ட இந்தத் தொடரில் 3 சுற்றுகளின் முடிவில் பிரணவ் 3புள்ளிகளுடன் முதலிடத்தில் உள்ளார். லியோன் மெண்டோன்கா 2.5 புள்ளிகளுடன் 2-வது இடத்திலும், ரவுனக் சத்வானி 2 புள்ளிகளுடன் 3-வது இடத்திலும், அபிமன்யுபுராணிக் 1.5 புள்ளிகளுடன் 4-வது இடத்திலும், பிரணேஷ் 1.5 புள்ளிகளுடன் 5-வது இடத்திலும் ஆர்.வைஷாலி 0.5 புள்ளிகளுடன் 6-வது இடத்திலும், ஹரிகாதுரோணவல்லி 0.5 புள்ளிகளுடன் 7-வது இடத்திலும், கார்த்திக்கேயன் முரளி 0.5புள்ளிகளுடன் 8-வது இடத்திலும் உள்ளனர்.
இந்நிலையில், தொடரின் 4-வது நாளான இன்று (நவ.08) 4-வது சுற்று ஆட்டங்கள் நடைபெற உள்ளது. இதில் மாஸ்டர்ஸ் பிரிவில் அர்ஜுன் எரிகைசி, அமீன் தபதாபேயியுடன் மோதுகிறார். பர்ஹாம் மக்சூட்லூ, அலெக்ஸி சரானாவை எதிர்கொள்கிறார். லெவோன் அரோனியன், அரவிந்த் சிதம்பரத்துடன் மோதுகிறார். மாக்சிம் வாச்சியர் லாக்ரேவ், விதித் குஜராத்தியுடன் பலப்பரீட்சை நடத்துகிறார்.
ஈடிவி பாரத் வாட்ஸ்அப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்