டெல்லி :17வது ஐபிஎல் சீசன் கிரிக்கெட் தொடர் விரைவில் தொடங்க உள்ளது. இந்நிலையில், ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் இருந்து நட்சத்திர வேகப்பந்து வீச்சாளர் முகமது ஷமி விலக உள்ளதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது. கணுக்கால் காயம் காரணமாக நீண்ட நாட்களாக அவதிப்பட்டு வரும் முகமது ஷமி, அதற்காக லண்டனில் அறுவை சிகிச்சை செய்து கொள்ள உள்ளதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது.
33 வயதான முகமது ஷமி கடைசியாக கடந்த ஆண்டு நவம்பர் மாதம் நடைபெற்ற உலக கோப்பை கிரிக்கெட் தொடரில் ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான இறுதிப் போட்டியில் விளையாடினார். தற்போது இங்கிலாந்து அணிக்கு எதிரான டெஸ்ட் கிரிக்கெட் தொடரில் கூட முகமது ஷமியின் பெயர் அணியில் இடம் பெறவில்லை.
கடந்த ஜனவரி மாதம் லண்டன் சென்ற முகமது ஷமி, கணுக்கால் காயம் காரணமாக சிறப்பு ஊசிகளை செலுத்திக் கொண்டார். இருப்பினும் அவர் பூரண குணம் பெறவில்லை எனக் கூறப்படுகிறது. இதையடுத்து அவருக்கு விரைவில் கணுக்கால் அறுவை சிகிச்சை மேற்கொள்ள உள்ளதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது.
இதன் காரணமாக முகமது ஷமி நடப்பு ஐபிஎல் சீசனில் இருந்து விலகுவதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது. இந்திய அணிக்காக 229 டெஸ்ட், 195 ஒருநாள், 24 டி20 கிரிக்கெட் போட்டிகளில் விளையாடி உள்ள முகமது ஷமி கடைசியாக உலக கோப்பை கிரிக்கெட் தொடரில் மொத்தம் 24 விக்கெட்டுகளை வீழ்த்தி அனைவரையும் அசர வைத்தார். இதற்காக அவருக்கு அர்ஜூனா விருது வழங்கி கவுரவிக்கப்பட்டது.
இதையும் படிங்க :Ind Vs Eng 4th Test: ராகுல் இன்? பும்ரா அவுட்? ரோகித்தின் திட்டம் என்ன?