திருநெல்வேலி:8வது டிஎன்பில் கிரிக்கெட் தொடர் சேலம், மற்றும் கோவையைத் தொடர்ந்து தற்போது திருநெல்வேலியில் நடைபெற்று வருகிறது. லீக் சுற்றுப் போட்டிகள் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. இன்னும் 6 லீக் போட்டிகள் மட்டுமே உள்ளதால் டாப் 4 இடத்தை பிடிக்கும் அணி எது என்ற எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் எழுந்துள்ளது. இந்தநிலையில் நேற்று நடைபெற்ற 22வது லீக் போட்டியில் ஷாருக்கான் தலைமையிலான லைகா கோவை கிங்ஸ் - ஹரி நிஷாந்த் தலைமையிலான மதுரை பாந்தர்ஸ் அணியுடன் மோதியது.
164 இலக்கு:திருநெல்வேலியில் உள்ள இந்தியா சிமெண்ட் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்ற இந்த போட்டியில் டாஸ் வென்ற மதுரை அணி பந்து வீச்சை தேர்வு செய்தது. அதன்படி முதலில் பேட்டிங் செய்த லைகா கோவை கிங்ஸ் 20 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட்டுகள் இழப்பிற்கு 163 ரன்கள் குவித்தது.
இதில் அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்திய கேப்டன் ஷாருக்கான் 26 பந்துகளில் 5 சிக்ஸர், 2 பவுண்டரி என 51 ரன்கள் விளாசினார். அவருக்கு அடுத்தபடியாக சாய் சுதர்சன் 34 ரன்களும், முகிலேஷ் 21 ரன்களும் விளாசினார்.
மதுரை அணி தரப்பில் அஜய் கிருஷ்ணா 4 விக்கெட்டுகளை கைப்பற்றி அசத்தினார். அவருக்கு அடுத்தபடியாக மிதுன் 2 விக்கெட்டுகளையும், முருகன் அஸ்வின், மணிகண்டன் மற்றும் குர்ஜப்னீத் சிங் ஆகியோர் தலா 1 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.