கோயம்புத்தூர்:8வது டிஎன்பிஎல் கிரிக்கெட் தொடர் சேலத்தில் தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வந்த நிலையில், தொடரின் 2ம் கட்ட லீக் போட்டிகள் கோயம்புத்தூரில் நடைபெற்று வருகிறது. இந்த தொடரின் 15வது லீக் போட்டியில் ஷாருக்கான் தலைமையிலான லைகா கோவை கிங்ஸ் - ஆண்டனி தாஸ் தலைமையிலான திருச்சி சோலாஸ் அணிகள் மோதின.
125 ரன்கள் இலக்கு:கோவை அவிநாசி சாலையில் உள்ள தனியார் கல்லூரி மைதானத்தில் நடைபெற்ற இந்த போட்டியில் டாஸ் வென்ற கோவை கிங்ஸ் பந்து வீச்சை தேர்வு செய்தது. இதனையடுத்து முதலில் களமிறங்கிய திருச்சி அணி, கோவையின் பந்து வீச்சை தாக்குப்பிடிக்க முடியாமல் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது.
அந்த அணியின் ஓபனிங் பேட்மேன்களான வசீம் அகமது 17 ரன்கள், சுந்தர் 5 ரன்கள் எடுத்து வெளியேற கேப்டன் ஆண்டனி தாஸ் ரன் ஏதும் எடுக்காமல் டக் அவுட் ஆகி வெளியேறினார். அதனைத் தொடர்ந்து அர்ஜுன் மூர்த்தி 3 ரன், நிர்மல் 3 ரன்கள், சரவணகுமார் 1 ரன் என அடுத்துதடுத்து விக்கெட்டுகளை இழந்து பெவிலியன் திரும்பினர்.
இதனால் 9.3 ஓவர்களில் 35 ரன்களுக்கு 6 விக்கெட்டுகளை இழந்தது திருச்சி. இதனைத் தொடர்ந்து சஞ்சய் யாதவ் மற்றும் ஜஃபர் ஜமால் ஆகியோர் இனைந்து 56 ரன்கள் சேர்த்தனர். இதில் 27 ரன்கள் எடுத்து இருந்த சஞ்சய் யாதவ், யுதீஸ்வரன் வீசிய பந்தில் ஆட்டமிழந்தார்.
இறுதியில் 9 விக்கெட் இழப்பிற்கு 124 ரன்கள் சேர்த்தது திருச்சி. அதிகபட்சமாக ஜஃபர் ஜமால் 41 ரன்கள் விளாசினார். கோவை அணி தரப்பில் கேப்டன் ஷாருக்கான் மற்றும் முகமது ஆகியோர் தலா 3 விக்கெட்டுகளையும், யுதீஸ்வரன் மற்றும் சுப்ரமணியன் ஆகியோர் தலா 1 விக்கெட்டுகளை கைப்பற்றினர்.