கொழும்பு:இந்திய - இலங்கை அணிகள் இடையிலான 2வது ஒருநாள் கிரிக்கெட் போட்டி நேற்று (ஆக.4) கொழும்புவில் நடைபெற்றது. இந்த ஆட்டத்தில் இந்திய அணி 32 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது. ஆட்டத்தின் 15வது ஓவரை அகில தனஞ்செயா வீசிய போது பந்து விராட் கோலியின் கால் பேடில் உரசிச் சென்றது.
இலங்கை வீரர்கள் அப்பீல் செய்ததை அடுத்து கள நடுவர் அவுட் வழங்கினார். கள நடுவரின் தீர்ப்பை எதிர்த்து விராட் கோலி மூன்றாவது நடுவருக்கு அப்பீல் செய்தார். பேட்டின் உள்பகுதியில் பந்து உரசிச் சென்றது டிஆர்எஸ் முறையில் கண்டறியப்பட்டதை அடுத்து, விராட் கோலியின் அவுட்டை மூன்றாவது நடுவர் ரத்து செய்தார்.
இதனால் அதிருப்திக்குள்ளான இலங்கை அணியின் விக்கெட் கீப்பர் குசல் மெண்டிஸ், தனது தலையில் அணிந்திருந்த ஹெல்மட்டை எடுத்து தரையில் வேகமாக வீசினார். இதைக் கண்டு விராட் கோலியே ஒரு கணம் அதிர்ந்து போனார். அதேபோல் டிரஸ்ஸிங் ரூமில் அமர்ந்து இருந்த பயிற்சியாளர் ஜெயசூர்யாவும் களத்திற்கு வந்த நடுவர்களிடம் வாக்குவாதம் செய்தார்.
தற்போது இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது. விராட் கோலிக்கு மூன்றாவது நடுவர் வழங்கிய தீர்ப்பால் கடுப்பான இலங்கை வீரர்கள் களத்திற்கு உள்ளேயும் வெளியேயும் நடந்து கொண்ட விதம் அநாகரீகமானது என ரசிகர்கள் விமர்சித்து வருகின்றனர். மேலும் சமூக வலைதளத்தில் வெளியான வீடியோவுக்கு பல்வேறு கலவையான விமர்சனங்கள் வந்து கொண்டு இருக்கின்றன.
இருப்பினும் அந்த ஆட்டத்தில் இந்திய அணி 32 ரன்கள் வித்தியாசத்தில் இலங்கையிடம் தோல்வியை தழுவியது. இந்திய வீரர்களின் பேட்டிங் மிக மோசமாக இருந்தது. ஷிவம் துபே, ஸ்ரேயஸ் ஐயர், கேஎல் ராகுல், வாஷிங்டன் சுந்தர் என அனைத்து மிடில் ஆர்டர் பேட்ஸ்மேன்களும் ஒற்றை இலக்கத்தில் அவுட்டாகி அதிருப்தி அளித்தனர்.
இந்த வெற்றியின் மூலம் மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் தொடரில் இலங்கை அணி 1-க்கு 0 என்ற கணக்கில் முன்னிலை பெற்றது. முதலாவது ஒருநாள் கிரிக்கெட் போட்டி வெற்றி தோல்வியின்றி சமனில் முடிந்தது. 3வது மட்டும் கடைசி ஒருநாள் கிரிக்கெட் போட்டி ஆகஸ்ட் 7ஆம் தேதி புதன்கிழமை நடைபெறுகிறது. இந்த ஆட்டத்தில் வெற்றி பெற்றால் மட்டுமே இந்திய அணி தொடரை 1-க்கு 1 என்ற கணக்கில் சமன் செய்ய முடியும் என்பது குறிப்பிடத்தகக்து.
இதையும் படிங்க:ஆல் ரவுண்டராக ஜொலித்த அஸ்வின்.. கோவையை வீழ்த்தி முதல் முறையாக சாம்பியன் பட்டம் வென்ற திண்டுக்கல்! - TNPL 2024