கொல்கத்தா : 17வது ஐபிஎல் கிரிக்கெட் தொடர் நாடு முழுவது கோலாகலமாக நடைபெற்று வருகிறது. இதில் இன்று (ஏப்.14) மாலை 3.30 மணிக்கு நடைபெறும் 28வது லீக் ஆட்டத்தில் முன்னாள் சாம்பியன் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் - லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன.
டாஸ் வென்ற கொல்கத்தா அணியின் கேப்டன் ஸ்ரேயாஸ் ஐயர் பந்துவீச்சை தேர்வு செய்தார். நடப்பு சீசனில் இதுவரை விளையாடிய 4 ஆட்டங்களில் 3ல் வெற்றியும் 1 தோல்வியும் கண்டு கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி புள்ளிப் பட்டியலில் 2வது இடத்தில் உள்ளது. கடைசியாக சென்னை அணிக்கு எதிரான ஆட்டத்தில் 7 விக்கெட் வித்தியாசத்தில் கொல்கத்தா அணி தோல்வியை தழுவியது.
இந்த ஆட்டத்தில் வெற்றி பெற்று மீண்டும் பழைய நிலைக்கு திரும்ப கொல்கத்தா அணி முயற்சிக்கும். அதேநேரம் லக்னோ அணியை பொறுத்தவரை விளையாடிய 5 ஆட்டங்களில் 3 வெற்றி 2 தோல்வியுடன் புள்ளிப் பட்டியலில் 4வது இடத்தில் உள்ளது. லக்னோ அணியில் வேகப்பந்து வீச்சாளர் மயங்க் காயம் காரணமாக விலகி இருப்பது அந்த அணிக்கு சற்று பின்னடைவாக காணப்படுகிறது.
அதேநேரம் சொந்த மண்ணில் லக்னோ குறைத்து எடை போடக் கூடாது. வெற்றிக்காக இரு அணி வீரர்களும் கடுமையாக மோதிக் கொள்வார்கள் என்பதால் ஆட்டத்தில் விறுவிறுப்புக்கு பஞ்சம் இருக்காது.