கொல்கத்தா :17வது ஐபிஎல் கிரிக்கெட் திருவிழா நாடு முழுவதும் விமரிசையாக நடைபெற்று வருகிறது. இதில் கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் இன்று (ஏப்.21) மாலை 3.30 மணிக்கு நடைபெற்ற 36வது லீக் ஆட்டத்தில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் - ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி பலப்பரீட்சை நடத்தின.
டாஸ் வென்று பெங்களூரு அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. முதலில் பேட்டிங் செய்த கொல்கத்தா 20 ஓவர்களில் 6 விக்கெட் இழப்புக்கு 222 ரன்கள் சேர்த்தது. அதிரடியாக விளையாடிய கேப்டன் ஸ்ரேயாஸ் ஐயர் 50 ரன்கள் குவித்தார். தொடக்க வீரரும் விக்கெட் கீப்பருமான பிலிப் சால்ட் 48 ரன்கள் விளாசினார்.
தொடர்ந்து 223 ரன்கள் எடுத்தால் வெற்றி இலக்குடன் பெங்களூரு அணி களமிறங்கியது. அரம்பமே அதிரடி காட்டிய விராட் கோலி 2வது ஓவரில் இரண்டு சிக்சர்களை பறக்க விட்டு பெங்களூரு ரசிகர்களை குஷிப்படுத்தினார். இருப்பினும் அவர் நீண்ட நேரம் நீடிக்கவில்லை ஹர்சித் ரானா பந்துவீச்சில் அவரிடமே கேட்ச் கொடுத்து விராட் கோலி விக்கெட்டை பறிகொடுத்தார்.
புல் டாசாக வந்த பந்தை விராட் கோலி அடிக்க அது ஹர்சித் ரானா கையில் சிக்கிக் கொண்டது. இதை நடுவர்கள் நோ பாலாக அறிவிப்பார்கள் என்று எண்ணிய விராட் கோலிக்கு கடைசியில் ஏமாற்றமே மிஞ்சியது. இதனால் கள நடுவர்களுடன் விராட் கோலி வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதன் காரணமாக சிறிது நேரம் ஆடுகளம் பரபரப்புடன் காணப்பட்டது.