கொல்கத்தா : 17வது ஐபிஎல் கிரிக்கெட் தொடர் பல்வேறு நகரங்களில் வெகு விமரிசையாக நடைபெற்று வருகிறது. இதில் கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் இன்று (ஏப்.21) மதியம் 3.30 மணிக்கு தொடங்கிய 36வது லீக் ஆட்டத்தில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் - ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகள் பலப்பரீட்சை நடத்தின.
டாஸ் வென்ற பெங்களூரு அணியின் கேப்டன் பாப் டு பிளெசிஸ் பந்துவீச்சை தேர்வு செய்தார். அதன்படி கொல்கத்தா அணியின் இன்னிங்சை விக்கெட் கீப்பர் பிலிப் சால்ட் மற்றும் சுனில் நரேன் ஆகியோர் தொடங்கினர். ஆரம்பம் முதலே அதிரடியாக விளையாடிய பிலிப் சாலட் 14 பந்துகளில் 7 பவுண்டரி 3 சிக்சர்கள் விளாசினார்.
அரை சதம் விளாசுவார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் பிலிப் சால்ட் 48 ரன்களில் ஆட்டமிழந்து ஏமாற்றம் அளித்தார். மறுமுனையில் எப்போதும் அதிரடி காட்டும் சுனில் நரேன் இந்த முறை 10 ரன்களில் ஆட்டமிழந்து அதிர்ச்சி அளித்தார். அவரைத் தொடர்ந்து களமிறங்கிய அங்கிருஷ் ரகுவன்ஷியும் 3 ரன்களில் ஸ்லிப்பில் கேட்சாகி ஏமாற்றம் அளித்தார்.
அடுத்து களமிறங்கிய வெங்கடேஷ் ஐயர் நீண்ட நேரம் நீடிக்கவில்லை. 16 ரன்கள் மட்டும் சேர்த்து கொடுத்து ஆட்டமிழந்தார். இதனிடையே களமிறங்கிய கேப்டன் ஸ்ரேயாஸ் ஐயர் அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தினார். ரிங்கு சிங் (24 ரன்) நல்ல ஒத்துழைப்பு வழங்கினார். 7 பவுண்டரி 1 சிக்சர் விளாசி 50 ரன்களை கடந்த ஸ்ரேயாஸ் ஐயர், அரை சதம் விளாசிய கையோடு ஆட்டமிழந்தார்.