சென்னை:17வது ஐபிஎல் தொடர் கடந்த மார்ச் 22ஆம் தேதி தொடங்கி நாட்டின் பல்வேறு நகரங்களில் நடைபெற்று வருகிறது. இந்த தொடரில் 22வது லீக் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி - கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியை எதிர்கொள்கின்றது.
சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் இன்று இரவு 7.30 மணிக்கு இந்த போட்டியானது நடைபெறவுள்ளது. பேட்டிங் மற்றும் பவுலிங் என இரண்டிலும் பலம் பொருந்திய அணியாக வலம் வந்து கொண்டு இருக்கும் கேகேஆர் அணி, நடப்பு தொடரில் விளையாடியுள்ள 3 போட்டிகளிலும் வெற்றி பெற்று புள்ளிப்பட்டியலில் 2வது இடத்தில் உள்ளது.
கொல்கத்தா அணியை பொறுத்தவரையில் சுனில் நரேன், ஆந்த்ரே ரஸ்ஸல், பில்சால்ட், புதுமுக வீரர் ரகுவன்சி, வெங்கடேஷ் அய்யர் ஆகியோர் பேட்டிங்கிலும், ஹர்திக் ரானா, வருண் சக்கரவர்த்தி உள்ளிட்டோர் பந்து வீச்சிலும் தங்களது ஆட்டத்தை சிறப்பாக வெளிப்படுத்தி வருகின்றனர்.
நடப்பு ஐபிஎல் தொடரின் முதல் இரண்டு போட்டிகளை வெற்றியுடன் தொடங்கிய சிஎஸ்கே அணி, அடுத்தடுத்து 2 போட்டிகளில் தோல்வியை சந்தித்தது. இந்த நிலையில் சொந்த மண்ணில் உள்ள சென்னை சேப்பாக்கம் மைதானத்திற்கு மீண்டும் திரும்பியுள்ள சிஎஸ்கே ஹாட்ரிக் தோல்வியைத் தவிர்க்க கடுமையாக போராடும் என்பது சந்தேகம் இல்லை.