கொல்கத்தா:17வது ஐபிஎல் கிரிக்கெட் தொடர் நாடு முழுவதும் கடந்த மார்ச் மாதம் முதல் தொடங்கி கோலாகலமாக நடைபெற்று வருகிறது. கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் நேற்று நடந்த 60வது லீக் ஆட்டத்தில் முன்னாள் சாம்பியன்கள் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் - மும்பை இந்தியன்ஸ் அணிகள் பலப்பரீட்சை செய்தன.
இதில் டாஸ் போடுவதற்கு முன்பே, மழை குறுக்கிட்டதால் 1.45 மணி நேரம் தாமதமாக இரவு 9.15 மணிக்கு போட்டி தொடங்கியது. மழை காரணமாக, 16 ஓவராக குறைக்கப்பட்டிருந்தது. இதில், முதல் 5 ஓவர் பவர்பிளேயாக இருந்தது. கொல்கத்தா அணியில் அங்கிரிஷ் ரகுவன்ஷிக்கு பதிலாக நிதிஷ் ராணா சேர்க்கப்பட்டிருந்தார். இதில், டாஸ் வென்ற மும்பை அணியின் கேப்டன் ஹர்திக் பாண்டியா பீல்டிங்கை தேர்வு செய்தார்.
நுவன் தூஷாரா பந்து வீசிய நிலையில், முதலில் பேட்டிங்க் செய்த கொல்கத்தா அணியின் பில் சாட், 6 ரன்கள் எடுத்து கேட்ச் கொடுத்து அவுட் ஆகினார். பின்னர் வந்த சுனில் நரின், பும்ரா வீசிய பந்தில் டக்-அவுட் ஆகினார். இவரைத்தொடர்ந்து அடுத்தடுத்து களமிறங்கிய வெங்கடேஷ் ஐயர், நிதிஷ் ராணா ஆகியோரின் ஜோடி ஸ்கோரை 77 ரன்கள் வரை கொண்டு சென்றது. இதற்கிடையே, பியுஷ் சாவ்லாவின் பந்து வீச்சில், வெங்கடேஷ் ஐயர் 21 பந்துகளில் 6 பவுண்டரிகள், 2 சிக்சர்கள் என 42 ரன்களிலும் அவுட் ஆகினார்.
பின்னர் நிதிஷ் ராணா 23 பந்துகளில் 4 பவுண்டரிகள், ஒரு சிக்சர் என 33 ரன்களை எடுத்திருந்த நிலையில், அவுட் செய்யப்பட்டார். இதைத்தொடர்ந்து வந்த ஆந்த்ரே ரஸ்செல் 14 பந்துகளில் 2 பவுண்டரிகள், 2 சிக்சர்கள் என 24 ரன்களிலும், ரிங்கு சின் 12 பந்துகளில் 2 சிக்சர்கள் அடித்திருந்த நிலையில் 20 ரன்களும் என எடுத்து ஆட்டமிழந்தனர்.