சென்னை:நடப்பு ஐபிஎல் தொடரின் 46வது லீக் போட்டியில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் -சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை எதிர் கொண்டது. சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நேற்று நடைபெற்ற இந்த போட்டியில் டாஸ் வென்ற ஹைதராபாத் கேப்டன் பேட் கம்மின்ஸ் பந்து வீச்சைத் தேர்வு செய்தார்.
அதன்படி, முதலில் ருதுராஜ் மற்றும் ரஹானே ஆகியோர் ஓப்பனிங் பேட்ஸ்மேன்களாக களமிறங்கினர். இதில் 9 ரன்களுக்கு ரஹானே அவுட் ஆகி வெளியேறினார். அடுத்து களமிறங்கிய மிட்செல் - ருதுராஜ்வுடன் ஜோடி சேர்ந்து அணியின் ஸ்கோரை அதிரடியாக உயர்த்தினர்.
இதில் இருவரும் அரைசதம் கடந்த நிலையில் ஜெய்தேவ் உனாட்கட் வீசிய பந்தில் 52 ரன்கள் எடுத்து இருந்த மிட்செல் அவுட் ஆனார். இதனையடுத்து களமிறங்கிய சிவம் துபே தன்னுடைய ஸ்டைலில் பேட்டை சுழற்ற, மறுபுறம் சதம் விளாசுவார் என எதிர்பார்க்கப்பட்ட ருதுராஜ், 98 ரன்களுக்கு அவுட் ஆகி ரசிகர்களுக்கும் அதிர்ச்சி கொடுத்தார்.
இறுதியாக, 20 ஓவர்கள் முடிவில் சென்னை அணி 3 விக்கெட்டுகளை இழந்து 212 ரன்கள் குவித்தது. ஷிவம் துபே 39 ரன்களுடனும், தோனி 5 ரன்களுடனும் களத்திலிருந்தனர். இதன் பின்னர் 213 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கியது ஹைதராபாத் அணி.
டிராவிஸ் ஹெட் மற்றும் அபிஷேக் சர்மா ஆகியோர் அந்த அணியின் ஓப்பனிங் பேட்ஸ்மேன்களாக களமிறங்கினர். இதில் ஹெட் 13 ரன், அபிஷேக் சர்மா 15 ரன் எடுத்த நிலையில் அவுட் ஆகி வெளியேறினர். இதனையடுத்து இம்பேக்ட் பிளேயராக களமிறங்கிய அன்மோல்ப்ரீத், டக் அவுட் ஆகி வெளியேறினார்.
இதன் பின்னர் களமிறங்கிய எய்டன் மார்க்ரம் மற்றும் நிதிஷ் ரெட்டி ஆகியோர் ஜோடி சேர்ந்தனர். இதில் நிதிஷ் ரெட்டி 15 ரன்னில் அவுட் ஆகி பெவிலியன் திரும்பினார். இதனையடுத்து களமிறங்கிய எந்த பேட்ஸ்மேனும் பெரியதாக சோபிக்கவில்லை.
மார்க்ரம் 32, கிளாசென் 20, அப்துல் சமத் 19, ஷபாஸ் அகமது 7 மற்றும் கேப்டன் பேட் கம்மின்ஸ் 5 ரன்னிலும் என அவுட் ஆகினர். இறுதியில் 18.5 ஓவர்களில் 134 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது ஹைதராபாத். இதனால், 78 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது, சென்னை சூப்பர் கிங்ஸ்.
ஹைதராபாத் அணியின் டாப் ஆர்டர் பேட்ஸ்மேன்களை காலி செய்த துஷார் தேஷ்பாண்டே 4 விக்கெட்களை வீழ்த்தினார். பதிரான மற்றும் முஸ்தபிசூர் தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினர். அபாரமாக விளையாடி 98 ரன்கள் விளாசிய கேப்டன் ருதுராஜ் ஆட்டநாயனாக தேர்வு செய்யப்பட்டார். இந்த வெற்றியின் மூலம் புள்ளி பட்டியலில் 6வது இடத்தில் இருந்த சிஎஸ்கே 3வது முன்னேறியுள்ளது.
இதையும் படிங்க:சொந்த மண்ணில் குஜராத்தை ஊதித்தள்ளிய பெங்களூரு! வில் ஜேக்ஸ் சதம் விளாசல்!