அகமதாபாத்:நியூசிலாந்து மகளிர் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் தொடரில் விளையாடியது. இதில் முதலாவது ஒருநாள் போட்டியில் 59 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியாவும், இரண்டாவது ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் 76 ரன்கள் வித்தியாசத்தில் நியூசிலாந்து அணியும் வெற்றி பெற்றது.
தொடர் யாருக்கு என்பதை தீர்மானிக்கும் 3வது மற்றும் கடைசி ஒருநாள் கிரிக்கெட் போட்டி நேற்று (அக்.29) அகமதாபாத்தில் வைத்து நடைபெற்றது. இதில் டாஸ் வென்ற நியூசிலாந்து அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது. அந்த அணியில் புரோக் ஹாலிடே அபாரமாக விளையாடி 86 ரன்கள் சேர்ட்தார். மற்றொரு வீராங்கனை ஜார்ஜியா 39 ரன்கள் எடுத்தார்.
இதன் மூலம் நியூசிலாந்து மகளிர் அணி 49.5 ஓவர் முடிவில் 232 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. இந்திய வீராங்கனை தீப்தி சர்மா அதிகபட்சமாக மூன்று விக்கெட்டுகளை கைப்பற்றினார். பிரியா மிஸ்ரா இரண்டு விக்கெட்டுகள் எடுத்தார். இதனை அடுத்து 233 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இந்திய மகளிர் அணி களம் இறங்கியது.
தொடக்க வீராங்கனையாக விளையாடிய ஸ்மிருதி மந்தானா அபாரமாக விளையாடி நங்கூரம் போன்று களத்தில் நின்றார். ஒரு பக்கம் விக்கெட்டுகள் விழுந்தாலும், மறுபக்கம் ஸ்மிருதி மந்தானா அதிரடி காட்டினார். ஷாபாலி வர்மா 12 ரன்களிலும், யாஷிகா பாட்டியா 35 ரன்களிலும் வெளியேற கேப்டன் ஹர்மன் பிரித் கவுர் அபாரமாக விளையாடி கடைசி வரை ஆட்டம் இழக்காமல் நின்று 59 ரன்கள் எடுத்தார்.
தொடர்ந்து சிறப்பாக விளையாடிய ஸ்மிருதி மந்தானா 122 பந்துகளில் சதம் விளாசினார். இதன் மூலம் மகளிர் ஒருநாள் கிரிக்கெட்டில் அதிக சதம் அடித்த இந்திய வீராங்கனை மித்தாலி ராஜின் சாதனையை ஸ்மிருதி மந்தானா முறியடித்தார். தற்போது ஸ்ருதி மந்தானா எட்டு சதம் அடித்து உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
இதன் மூலம் இந்திய மகளிர் அணி 44.2 ஓவரில் நான்கு விக்கெட் இழப்பிற்கு வெற்றி இலக்கை எட்டியது. இந்த வெற்றியின் மூலம் தொடரை 2-க்கு 1 என்ற கணக்கில் இந்திய மகளிர் அணி கைப்பற்றி டி20 உலக கோப்பையில் கண்ட தோல்விக்கு நியூசிலாந்து மகளிர் அணிக்கு பதிலடி கொடுத்தது.
இதையும் படிங்க:பலோன் டி ஓர் விருது விழாவில் சர்ச்சை! மான்செஸ்டர் வீரருக்கு எதிராக கொடி பிடிக்கும் ரியல் மாட்ரிட்!