அஸ்தானா:கஜகஸ்தான் நாட்டின் அஸ்தானாவில் ஆசிய டேபிள் டென்னிஸ் சாம்பியன்ஷிப் தொடர் நடைபெற்று வருகிறது. இதில் மகளிர் பிரிவில் அரைஇறுதி ஆட்டத்தில் இந்திய அணி, ஜப்பானை எதிர்கொண்டது. உலக தரவரிசையில் 92வது இடத்தில் இருக்கும் இந்திய வீராங்கனை அய்ஹிகா முகர்ஜி, பாரீஸ் ஒலிம்பிக்கில் வெள்ளிப் பதக்கம் வென்ற ஜப்பான் வீராங்கனை மிவா ஹரிமோடோவை எதிர்கொண்டார்.
ஆரம்பம் முதலே அதிரடியாக விளையாடிய 16 வயதான மிவா ஹரிமோடோ, இந்திய வீராங்கனைக்கு கடும் சவால் அளித்தார். விறுவிறுப்பாக சென்ற ஆட்டத்தின் இறுதியில் மிவா ஹரிமோடோ 11-க்கு 8, 9க்கு 11, 11-க்கு 8, 11-க்கு 13, 11-க்கு 7 என்ற கணக்கில் வெற்றி பெற்றார். தொடர்ந்து மற்றொரு இந்திய நம்பிக்கை நட்சத்திரம் மணிகா பத்ரா, உலக தரவரிசையில் 17வது இடத்தில் இருக்கும் ஜப்பானின் சத்சுகி ஒடோவை (Satsuki Odo) எதிர்கொண்டார்.
நம்பிக்கை நட்சத்திரம் அபாரம்:
அபாரமாக விளையாடிய மணிகா பத்ரா 11-க்கு 6, 11-க்கு 5, 11-க்கு 7 என்ற நேர் செட் கணக்கில் வெற்றிக் கனியை பறித்தார். மூன்றாவது ஆட்டத்தில் இந்திய வீராங்கனை சுத்ரிதா முகர்ஜி, உலக தரவரிசையில் 9வது இடத்தில் உள்ள மிமாவிடம் 3-க்கு 0 என்ற புள்ளிகள் கணக்கில் தோல்வியை தழுவினார்.
இறுதிப் போட்டிக்குள் நுழைய தேவையான கடைசி ஆட்டத்தில் நம்பிக்கை நட்சத்திரம் மணிகா பத்ரா, ஜப்பான் வீராங்கனை மிவா ஹரிமோடோவிடம் 3-க்கு 1 என்ற புள்ளிகள் கணக்கில் தோல்வியை தழுவினார். இதன் மூலம் ஆசிய சாம்பியன்ஷிப் அரைஇறுதியில் இந்திய மகளிர் அணி ஜப்பானிடம் 3-க்கு 1 என்ற புள்ளிகள் கணக்கில் படுதோல்வியை சந்தித்தது.
இந்திய மகளிர் அணி வெண்கலம்:
இந்த தோல்வியின் மூலம் இந்திய மகளிர் அணிக்கு வெண்கலப் பதக்கம் வழங்கப்பட்டது. ஆசிய டேபிள் டென்னிஸ் சாம்பியன்ஷிப் விளையாட்டு தொடரில் முதல் முறையாக இந்திய மகளிர் அணி பதக்கம் வென்று வரலாறு படைத்து உள்ளது. கடந்த 1972ஆம் ஆண்டு ஆசிய டேபிள் டென்னிஸ் யூனியன் மூலம் இந்த போட்டி நடத்தப்பட்டு வருகிறது.
அதில் இருந்து ஏறத்தாழ 50 ஆண்டுகளுக்கு பின்னர் முதல் முறையாக இந்திய அணி ஆசிய டேபிள் டென்னிஸ் சாம்பியன்ஷிப் போட்டியில் பதக்கம் வென்று வரலாறு படைத்து இருப்பது குறிப்பிடத்தக்கது. அதற்கு முன் வரை இந்த விளையாட்டு தொடரை ஆசிய டேபிள் டென்னிஸ் சம்மேளனம் நடத்தி வந்தது.
அரைஇறுதியில் இந்திய ஆடவர்:
அதில் 1960 ஆம் ஆண்டு அப்போதைய பாம்பேயில் நடைபெற்ற ஆசிய டேபிள் டென்னிஸ் சாம்பியன்ஷிப் போட்டியில் இந்தியா வெண்கலப் பதக்கம் வென்று இருந்தது குறிப்பிடத்தக்கது. ஆசிய கண்டத்தில் நடத்தப்படும் டேபிள் டென்னிஸ் விளையாட்டு போட்டிகளில் இந்தியா கைப்பற்றும் 6வது பதக்கம் இது என்பது குறிப்பிடத்தக்கது.
இது வரை 6 முறை இந்தியா பதக்கம் வென்று உள்ள நிலையில் அவை அனைத்தும் வெண்கலம் என்பது குறிப்பிடத்தக்கது. ஆசிய டேபிள் டென்னிஸ் சாம்பியன்ஷிப் தொடரில் இந்திய ஆடவர் அணியும் ஏறத்தாழ பதக்கத்தை உறுதி செய்துள்ளது. கஜகஸ்தான் ஆடவர் அணியை 3-க்கு 1 என்ற புள்ளிகள் கணக்கில் வீழ்த்தி இந்திய அணி அரைஇறுதி போட்டிக்கு தகுதி பெற்றது. இன்று நடைபெற உள்ள அரைஇறுதி ஆட்டத்தில் இந்தியா - ஹாங் காங் அல்லது சீன தைபே ஆகிய நாடுகளில் ஒன்றை எதிர்கொள்ளும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதையும் படிங்க:மகளிா் டி20 உலகக்கோப்பை: இலங்கையை வீழ்த்தி இந்திய அணி அபார வெற்றி!