பெங்களூரு: தென் ஆப்பிரிக்கா மகளிர் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து ஒரு டெஸ்ட், தலா 3 ஒருநாள் மற்றும் டி20 போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது. அதில் இரு அணிகளுக்கு இடையே முதலில் ஒருநாள் தொடர் நடைபெறுகிறது. அதன்படி இரு அணிகளுக்கு இடையிலான முதலாவது ஒருநாள் போட்டி பெங்களூரு சின்னசாமி மைதானத்தில் இன்று (ஜூன்.16) நடைபெற்றது.
இதில் டாஸ் வென்ற இந்திய அணியின் கேப்டன் ஹர்மன்பிரீத் கவுர் பேட்டிங்கை தேர்வு செய்தார். அதன்படி முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி 50 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட்டுகள் இழப்பிற்கு 265 ரன்கள் குவித்தது. இந்திய அணியில் அதிகபட்சமாக அபாரமாக விளையாடிய மந்தனா 117 ரன்கள் குவித்தார்.
இறுதி கட்டத்தில் தீப்தி சர்மா 37 ரன்களும், பூஜா 31 ரன்களும் குவித்து அணி 250 ரன்களை கடக்க உதவினர். இதனையடுத்து 266 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்கை நோக்கி களமிறங்கிய தென் ஆப்பிரிக்கா, இந்திய வீராங்கனைகளின் பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது.