பாரீஸ்:பிரான்ஸ் தலைநகர் பாரீசில் 33வது ஒலிம்பிக் விளையாட்டு திருவிழா கோலாகலமாக நடைபெற்று வருகிறது. இதில் இன்று (ஆக.1) குரூப் பி பிரிவில் நடைபெற்ற லீக் ஆட்டத்தில் நடப்பு சாம்பியன் பெல்ஜியம் - இந்தியா அணிகள் பலப்பரீட்சை நடத்தின. தொடக்கத்தில் ஆதிக்கம் செலுத்திய இந்திய அணி 18வது நிமிடத்தில் கோல் போட்டது.
பெல்ஜிய வீரர் ஆர்தர் தி ஸ்லோவர் வழங்கிய கிரேஸ் வாய்ப்பை நன்றாக பற்றிக் கொண்ட இந்திய வீரர் அபிஷேக், 18வது நிமிடத்தில் அசத்தலான கோல் அடித்து அணியின் வெற்றிக் கணக்கை தொடங்கி வைத்தார். முதல் பாதியில் இந்தியா முன்னிலை வகித்த நிலையில் இரண்டாவது பாதியில் ஆட்டம் மெல்ல பெல்ஜியம் வசம் செல்லத் தொடங்கியது.
ஆட்டத்தின் 33வது நிமிடத்தில் பெல்ஜிய வீரர் Thibeau Stockbroekx பதில் கோல் திருப்பி ஆட்டத்தை சமன் செய்தார். தொடர்ந்து போட்டி டிராவை நோக்கி சென்று கொண்டு இருந்த நிலையில் பெனால்டி வாய்ப்பை பயன்படுத்திக் கொண்ட பெல்ஜியம் அணி மேலும் ஒரு கோல் போட்டு முன்னிலை பெற்றது.
பெல்ஜியம் வீரர் John-John Dohmen பெனால்டி வாய்ப்பை நன்றாக பயன்படுத்திக் கொண்டு அந்த அணிக்காக இரண்டாவது கோலை போட்டார். இதனால் ஆட்டம் 2-க்கு 1 என்ற கணக்கில் பெல்ஜியம் அணியின் கைவசம் சென்றது. தொடர்ந்து பதில் கோல் திருப்பி ஆட்டத்தை சமன் செய்ய இந்திய வீரர்கள் கடுமையாக போராடினர்.
இருப்பினும் வாய்ப்புகள் இந்திய அணிக்கு சாதகமாக அமையவில்லை. கடைசியில் 2-க்கு 1 என்ற கணக்கில் பெல்ஜியும் அணி வெற்றி பெற்றது. இந்திய அணி தோல்வி அடைந்தாலும் தொடர்ந்து கால் இறுதி வாய்ப்பில் நீடிக்கிறது. தனது முதல் மூன்று லீக் ஆட்டங்களில் இந்திய அணி முறையே நியூசிலாந்து அணியை 3-க்கு 2 என்ற கணக்கில் வீழ்த்தியது.
அதைத் தொடர்ந்து அர்ஜென்டினா அணிக்கு எதிரான ஆட்டம் 1-க்கு 1 என்ற கணக்கில் சமனில் முடிந்தது. கடைசியாக அயர்லாந்து அணிக்கு எதிரான ஆட்டத்தில் இந்திய அணி 2-க்கு 0 என்ற கணக்கில் வெற்றி பெற்றது. இதனால் கால் இறுதி வாய்ப்பில் இந்திய அணி தொடர்ந்து நீடிக்கிறது. நாளை (ஆக.2) ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஆட்டத்தில் இந்திய அணி விளையாடுகிறது. இந்த ஆட்டத்தில் வெற்றி பெறும் பட்சத்தில் இந்திய அணி நேரடியாக கால் இறுதி சுற்றுக்கு முன்னேறும்.
இதையும் படிங்க:பாரீசை கலக்கிய துருக்கி வீரர்.. தலைவன் வேற ரகம் பார்த்து உஷாரு... வைரலாகும் தக் லைப் சம்பவம்! - paris olympics 2024