திருநெல்வேலி:டிஎன்பில் எனப்படும் தமிழ்நாடு பிரீமியர் லீக் கிரிக்கெட் தொடர், கடந்த 5 ஆம் தேதி சேலம் அடுத்துள்ள வாழப்பாடியில் தொடங்கியது. அதனை தொடர்ந்து 2வது கட்ட லீக் போட்டிகள் கோவையில் நடைபெற்று முடிந்த நிலையில், தொடரின் 3வது கட்ட லீக் போட்டிகள் திருநெல்வேலியில் நடைபெற்று வருகின்றன.
இதற்காக சேலம், கோவை, மதுரை, திருச்சி, திருப்பூர் உள்ளிட்ட 8 அணிகளின் வீரர்கள் திருநெல்வேலிக்கு வருகை புரிந்து விளையாடி வருகின்றனர். மேலும் போட்டிகள் இல்லாத நேரங்களில் நெல்லையில் உள்ள அகஸ்தியர் அருவி, நெல்லையப்பர் கோயில், முண்டந்துறை வனவிலங்கு சரணாலயம் உள்ளிட்ட இடங்களை சக வீரர்களுடன் இணைந்து சுற்றிப்பார்ப்பதுடன், இருட்டுக்கடை அல்வாவையும் அவர்கள் ருசித்து வருகின்றனர்.
நெல்லையப்பர் கோயிலில் நடராஜன்: இந்த நிலையில், 'யார்க்கர் கிங்' என்றழைக்கப்படும் சேலத்தைச் சேர்ந்த, இந்திய கிரிக்கெட் வீரரும், ஐபிஎல் மற்றும் டிஎன்பிஎல் கிரிக்கெட் போட்டிகளின் நாயகனாக திகழ்ந்துவரும் வேகபந்துவீச்சாளர் நடராஜன், நெல்லையப்பர் கோயிலில் சாமி தரிசனம் செய்தார்.
முதலில் கோயிலுக்கு சென்ற அவர், சுவாமி நெல்லையப்பர் காந்திமதி அம்பாள் ஆகியோரை தரிசனம் செய்தார். பின்னர் கோயில் நிர்வாகம் சார்பில் மாலை அணிவித்து அவருக்கு மரியாதை செய்யப்பட்டது. தொடர்ந்து தாமரை சபை நடராஜமூர்த்தி மற்றும் தாமரை சபா மண்டபத்தை பார்வையிட்டு தரிசனம் மேற்கொண்டார்.