தமிழ்நாடு

tamil nadu

"இந்த வெற்றி எனக்கு மிகவும் சிறப்பானது" - ஹர்திக் பாண்டியா உருக்கம்! - T 20 world cup 2024

By ETV Bharat Tamil Nadu Team

Published : Jun 30, 2024, 10:52 AM IST

Updated : Jun 30, 2024, 10:59 AM IST

ஒட்டுமொத்த தேசமும் எங்களிடம் என்ன எதிர்பார்த்ததோ அதை இன்று நாங்கள் நிறைவேற்றி உள்ளோம் என்று டி20 உலகக்கோப்பை வெற்றி குறித்து பெருமிதத்துடன் கூறியுள்ள இந்திய அணியின் ஆல் -ரவுண்டர் ஹர்திக் பாண்டியா, இந்த வெற்றி தமக்கு மிகவும் சிறப்பானது என்று உருக்கமாக கூறியுள்ளார்.

ஹர்திக் பாண்டியா
ஹர்திக் பாண்டியா (Image Credit - ANI)

பார்படாஸ்:என்ன நடக்குமோ என்ற திகிலுடன் ஒட்டுமொத்த கிரிக்கெட் உலகமே அந்த கடைசி ஓவரை எதிர்நோக்கிக் கொண்டிருந்தது. இந்தியாவுக்கு எதிரான டி 20 உலகக்கோப்பை இறுதிப் போட்டியில் வெற்றிபெற, தென்னாப்பிரிக்க அணிக்கு 6 பந்துகளில் 16 ரன்கள் தேவை... இரு அணிகளுக்கும் வாழ்வா, சாவா என்ற இக்கட்டான நிலை... கடைசி ஓவரை வீசும் மிகவும் கடினமான பொறுப்பை ஹர்திக் பாண்டியாவிடம் தருகிறார் கேப்டன் ரோஹித் சர்மா...

பந்தை எதி்ர்கொள்வது தென்னாப்பிரிக்க அணியின் அதிரடி ஆட்டக்காரரான டேவிட் மில்லர்... பாண்டியா வீசிய முதல் பந்தை லாங் ஆன் திசையில் சிக்ஸுக்கு விரட்டுகிறார் மில்லர்... ஆனால், பந்து சிக்ஸுக்கு செல்லவில்லை. மாறாக சூர்யகுமார் யாதவின் அற்புதமான கேட்சின் விளைவாக ஆட்டமிழக்கிறார் மில்லர். தென்னாப்பிரிக்காவின் கடைசி நம்பிக்கையாக களத்தில் இருந்த மில்லர் அவுட்டானதும், வெற்றி இந்தியாவின் வசமானது. இந்திய அணியின் இந்த வெற்றியை கோடானுகோடி கிரிக்கெட் ரசிகர்கள் கொண்டாடி தீர்த்து வருகின்றனர்.

"ஒட்டுமொத்த தேசமும் எங்களிடம் என்ன எதிர்பார்த்ததோ அதை இன்று நாங்கள் நிறைவேற்றி உள்ளோம் என்று டி20 உலகக்கோப்பை வெற்றி குறித்து பெருமிதத்துடன் கூறியுள்ள இந்திய அணியின் ஆல் - ரவுண்டர் ஹர்திக் பாண்டியா, இந்த வெற்றி தமக்கு மிகவும் சிறப்பானது" என்றும் உருக்கமாக தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து மேலும் கூறும்போது, "ஐபிஎல் 2024 டி20 கிரிக்கெட் தொடரில் என்னை மீண்டும் மும்பை இந்தியன்ஸ் அணியில் சேர்த்ததுடன், ரோகித் சர்மா வகித்துவந்த கேட்பன் பொறுப்பும் எனக்கு அளிக்கப்பட்டது. இதனால் மும்பை இந்தியன்ஸ் அணி ரசிகர்கள் என் மீதும், என்னை ஏலத்தில் எடுத்த அணியின் உரிமையாளர் மீது கடும் கோபத்தில் இருந்தனர். சோஷியல் மீடியாவில் என்னை கேலி, கிண்டல் செய்து விமர்சித்து வந்தனர். இதனால் கடந்த ஆறு மாதங்களாக கடும் மனவேதனைக்கு ஆளானேன்.

ஆனால், இந்த விவகாரம் குறித்து நான் ஒரு வார்த்தைக்கூட பேசவில்லை. கடுமையாக உழைத்தால், அதற்கான பலன் ஓர் நாள் நிச்சயம் உண்டு என்ற நம்பிக்கையுடன் எதையும் பேசாமல் என் பணியை முடிந்தவரை சிறப்பாக செய்து வந்தேன். அதற்கான பலன் இன்று கிடைத்துள்ளது. இது ஒட்டுமொத்த இந்திய அணி வீரர்களின் பங்களிப்புக்கு கிடைத்த வெற்றி. கடந்த ஆறு மாதங்களாக என் மீது வைக்கப்பட்ட விமர்சனங்களுக்கு பதிலளிக்கும் விதத்தில் இந்த வெற்றி அமைந்துள்ளதால், இவ்வெற்றி எனக்கு மிகவும் சிறப்புமிக்கது" என்று பாண்டியா உணர்ச்சி பொங்க கூறினார்.

இந்திய அணியின் தலைமை பயிற்சியாளர் பொறுப்பிலிருந்து ராகுல் டிராவிட் விடைபெறுவது குறித்து கேட்டதற்கு, "அவர் மிகவும் அற்புதமான மனிதர். அவருடன் பணியாற்றிய நாட்கள் உண்மையில் மகிழ்ச்சிகரமானவை. டி20 உலகக்கோப்பையை வென்றெடுத்துள்ள இந்த சிறப்பான தருணத்தில் அவருக்கு பிரியாவிடை கொடுக்கிறோம்" என்று உணர்ச்சி பெருக்குடன் தெரிவித்தார் ஹர்திக் பாண்டியா.

இதையும் படிங்க:சர்வதேச டி20 போட்டிகளில் ஓய்வை அறிவித்த விராட் கோலி, ரோகித் சர்மா!

Last Updated : Jun 30, 2024, 10:59 AM IST

ABOUT THE AUTHOR

...view details