சென்னை:ஹங்கேரி தலைநகர் புடாபெஸ்டில் 45வது செஸ் ஒலிம்பியாட் தொடரின் முதல் சுற்று ஆட்டம் இன்று தொடங்குகிறது. நேற்று தொடக்க விழா நடைபெற்ற நிலையில், இன்று (செப்.11) முதல் வரும் 22ஆம் தேதி வரை 11 சுற்றுகளாக போட்டிகள் நடைபெறுகின்றன. ஓபன் சுற்றில் ஆடவர் பிரிவில் 197 அணிகளும், மகளிர் பிரிவில் 183 அணிகளும் பங்கேற்றுள்ளன.
ஒவ்வொரு அணியிலும் ஒரு மாற்று வீரர் உள்பட 5 வீரர்கள் இடம் பிடித்திருப்பர். ஒவ்வொரு சுற்றிலும் வெற்றி பெறும் வீரருக்கு ஒரு புள்ளியும், டிரா செய்பவர்களுக்கு அரை புள்ளியும் வழங்கப்படும். இந்தியாவில் இருந்து கடந்த செஸ் ஒலிம்பியாட் தொடரில் களமிறங்கிய அதே அணி தான் தற்போதும் விளையாடுகிறது.
ஓபன் சுற்றின் ஆடவர் பிரிவில் பிரக்ஞானந்தா, அர்ஜூன் எரிகேசி, குகேஷ், விதித் சந்தோஷ், ஹரிகிருஷ்ணா ஆகியோர் இடம்பிடித்துள்ளனர். அதேபோல், மகளிர் பிரிவில் தமிழ்நாட்டை சேர்ந்த வைஷாலி, ஹரிகா துரோணோவள்ளி, வந்திகா அகர்வால், தானியா சச்தேவ், திவ்யா தேஷ்முக் ஆகியோர் உள்ளனர்.