பார்படோஸ்:9வது 20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட் தொடர் அமெரிக்கா மற்றும் வெஸ்ட் இண்டீஸ் ஆகிய நாடுகளில் நடைபெற்று வருகிறது. குரூப் சுற்று ஆட்டங்கள் நிறைவு பெற்ற நிலையில், ஒவ்வொரு குரூப்பிலும் முதல் இரண்டு இடங்களை பிடித்த இந்தியா, அமெரிக்கா, ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, வெஸ்ட் இண்டீஸ், ஆப்கானிஸ்தான், தென் ஆப்பிரிக்கா, வங்கதேசம் ஆகிய அணிகள் சூப்பர் 8 சுற்றுக்கு முன்னேறின.
முன்னாள் சாம்பியன்கள் பாகிஸ்தான், இலங்கை மற்றும் நியூசிலாந்து உள்ளிட்ட 12 அணிகள் லீக் சுற்றுடன் நடையைக் கட்டின. சூப்பர் 8 சுற்றில் அணிகள் இரு பிரிவாக பிரிக்கப்பட்டு போட்டிகள் நடைபெறுகின்றன. இதில் முதல் குரூப்பில் இந்தியா, ஆஸ்திரேலியா, ஆப்கானிஸ்தான், வங்கதேசம் ஆகிய அணிகள் இடம் பெற்றுள்ளன.
அதேபோல், குரூப் 2 பிரிவில் வெஸ்ட் இண்டீஸ், தென் ஆப்பிரிக்கா, இங்கிலாந்து, அமெரிக்கா ஆகிய அணிகள் இடம் பெற்றுள்ளன. இதில், ஒவ்வொரு அணியும் தங்கள் பிரிவில் உள்ள மற்ற அணிகளுடன் தலா ஒரு முறை மோத வேண்டும். இதன் முடிவில் இரு பிரிவிலும் முதல் இரு இடங்களை பிடிக்கும் அணிகள் அரைஇறுதிக்கு முன்னேறும்.
அதில் வெல்லும் அணிகள் வருகிற 29 ஆம் தேதி நடக்கும் இறுதிப் போட்டியில் மல்லுக்கட்டும். இந்நிலையில், வெஸ்ட் இண்டீஸ் பார்படோஸ் தீவுகளில் இன்று (ஜூன்.20) நடைபெறும் சூப்பர் 8 சுற்று ஆட்டத்தில் இந்தியா - ஆப்கானிஸ்தான் அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன. டாஸ் வென்ற இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா பேட்டிங்கை தேர்வு செய்தார்.