தர்மசாலா : இங்கிலாந்து அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது. முதல் நான்கு போட்டிகள் நிறைவடைந்த நிலையில், அதில் முறையே இந்திய அணி 3-க்கு 1 என்ற கணக்கில் வெற்றி பெற்று தொடரை கைப்பற்றியது.
இந்நிலையில் இவ்விரு அணிகளுக்கு இடையிலான 5வது மற்றும் கடைசி டெஸ்ட் கிரிக்கெட் போட்டி கடந்த மார்ச் 7ஆம் தேதி இமாச்சல பிரதேச மாநிலம் தர்மசாலாவில் தொடங்கியது. டாஸ் வென்ற இங்கிலாந்து அணி பேட்டிங்கை தேர்வு செய்தது. முதல் இன்னிங்சில் இந்திய சுழற்பந்து வீச்சுக்கு ஈடுகொடுக்க முடியாமல் இங்கிலாந்து அணி 218 ரன்களில் ஆல் அவுட்டானது.
அதிகபட்சமாக தொடக்க வீரர் ஷேக் கிராவ்லி 79 ரன்கள் எடுத்தார். இந்திய அணியில் குல்தீப் யாதவ் 5 விக்கெட்டுகளும், அஸ்வின் 4 விக்கெட்டும், ரவீந்திர ஜடேஜா 1 விக்கெட்டும் வீழ்த்தினர். தொடர்ந்து முதல் இன்னிங்சில் களமிறங்கிய இந்திய அணியில் தொடக்க வீரர் யஷஸ்வி ஜெய்ஸ்வால 57 ரன்கள் குவித்து நல்ல அடித்தளம் அமைத்துக் கொடுத்தார்.
அதன்பின் நிலைத்து நின்று விளையாடிய ரோகித் சர்மா (103 ரன்), சுப்மன் கில் (110 ரன்) சதம் விளாசி அணியின் ஸ்கோரை ஜெட் வேகத்தில் உயர்த்தினர். அவர்களை தொடர்ந்து அறிமுக வீரர் தேவதூத் படிகல் 65 ரன்கள் குவித்தார். அதேபோல் ஷர்பரஸ் கானும் தன் பங்குக்கு 56 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.