கான்பூர்:இந்தியா - வங்கதேசம் அணிகள் இடையிலான 2வது மற்றும் கடைசி டெஸ்ட் கிரிக்கெட் போட்டியின் 5வது மற்றும் இறுதி நாள் ஆட்டம் உத்தர பிரதேசம் மாநிலம் கான்பூரில் உள்ள கிரீன் பார்க் மைதானத்தில் நடைபெற்றது. இதில் வங்கதேசம் அணி இரண்டாவது இன்னிங்சில் 146 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது.
தொடர்ந்து 95 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை நோக்கி இந்திய வீரர்கள் களம் கண்டனர். கேப்டன் ரோகித் சர்மா 8 ரன்களில் ஆட்டமிழந்து அதிர்ச்சி அளித்தார். அவரைத் தொடர்ந்து களமிறங்கிய சுப்மன் கில் (6 ரன்) நீண்ட நேரம் நீடிக்கவில்லை. சிறிது நேரத்தில் நடையை கட்டினார்.
இதனிடையே விராட் கோலி மற்றொரு தொடக்க வீரர் யஷஸ்வி ஜெய்ஸ்வால் கூட்டணி அமைத்து அணியை வெற்றிப் பாதைக்கு அழைத்துச் சென்றனர். அபாரமாக விளையாடிய யஷஸ்வி ஜெய்ஸ்வால் (51 ரன்) அரை சதம் விளாசிய கையோடு ஆட்டமிழந்தார். இறுதியில் இந்திய அணி 17.2 ஒவர்கள் முடிவில் 3 விக்கெட் இழப்புக்கு 98 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது.