பல்லேகலே: இந்திய அணி இலங்கையில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு தலா 3 போட்டிகள் கொண்ட டி20 மற்றும் ஒருநாள் கிரிக்கெட் தொடரில் விளையாடி வருகிறது. முதலில் இந்தியா - இலங்கை அணிகள் இடையிலான டி20 கிரிக்கெட் தொடர் நடைபெற்று வருகிறது. இதில் நேற்று (ஜூலை.28) பல்லேகலேவில் நடைபெற்ற முதலாவது டி20 கிரிக்கெட் போட்டியில் இலங்கை - இந்தியா அணிகள் பலப்பரீட்சை நடத்தின.
டாஸ் வென்ற இலங்கை அணியின் கேப்டன் சரித் அசலன்கா பந்துவீச்சை தேர்வு செய்தார். அதன்படி முதலில் களமிறங்கிய இந்திய அணி 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட் இழப்புக்கு 213 ரன்கள் எடுத்தது. தொடக்க வீரர்கள் யஷஸ்வி ஜெய்ஸ்வால் (40 ரன்), சுப்மன் கில் (34 ரன்) நல்ல தொடக்க அமைத்து கொடுத்தனர்.
அதன்பின் களமிறங்கிய கேப்டன் சூர்யகுமார் யாதவ் 58 ரன்கள் விளாசி அணியின் ஸ்கோரை விறுவிறுவென உயர்த்தினார். அவருக்கு உறுதுணையாக ரிஷப் பன்ட் 49 ரன்கள் குவித்தார். தொடக்க வீரர்கள் 4 பேரும் 30 ரன்களுக்கு மேல் குவித்து அணியின் ஸ்கோரை உயர்த்தினர். இதனால் இந்திய அணி 20 ஓவர்களில் 7 விக்கெட் இழப்புக்கு 213 ரன்களை எடுத்தது.
இலங்கை தரப்பில் மதீஷ பத்திரனா 4 விக்கெட்டுகளை வீழ்த்தினார். தொடர்ந்து சற்று கடினமான இலக்கை நோக்கி களமிறங்கிய இலங்கை அணியில் தொடக்க வீரர்கள் நல்ல பார்ட்னர்ஷிப் அமைத்து அணியின் ஸ்கோரை உயர்த்தினர். தொடக்க விக்கெட்டுக்கு பதுன் நிஷங்கா மற்றும் விக்கெட் கீப்பர் குசல் மெண்டிஸ் 84 ரன்கள் சேர்த்தனர்.