பாரீஸ்:33வது ஒலிம்பிக் விளையாட்டு திருவிழா பிரான்ஸ் தலைநகர் பாரீசில் கடந்த ஜூலை 26ஆம் தேதி பிரம்மாண்ட தொடக்க விழாவுடன் தொடங்கி நடைபெற்று வருகிறது. இதில் இன்று (ஜூலை.30) ஹாக்கி குரூப் பி பிரிவில் நடைபெற்ற லீக் ஆட்டத்தில் இந்தியா - அயர்லாந்து அணிகள் பலப்பரீட்சை நடத்தின.
ஆட்டம் தொடங்கியது முதலே இந்திய வீரர்கள் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். ஆட்டத்தின் 11வது நிமிடத்தில் கிடைத்த அருமையான பெனால்டி வாய்ப்பை பயன்படுத்திய இந்திய அணியின் கேப்டன் ஹர்மன்பிரீத் சிங் கோல் அடித்தார். தொடர்ந்து ஆட்டத்தின் 19வது நிமிடத்தில் மீண்டும் ஒரு கோல் அடித்து கேப்டன் ஹர்மன்பிரீத் சிங் அசத்தினார்.
நடப்பு பாரீஸ் ஒலிம்பிக் ஹாக்கி போட்டிகளில் ஹர்மன்பிரீத் சிங் அடிக்கும் நான்காவது கோல் இது என்பது குறிப்பிடத்தக்கது. இந்திய வீரர்களின் அசத்தால தடுப்பு ஆட்டத்தால் அயர்லாந்து வீரர்களால் தொடர்ந்து கோல் அடிக்க முடியவில்லை. பெனால்டி வாய்ப்புகளையும் விட்டு வைக்காத இந்திய வீரர்கள், அயர்லாந்து அணிக்கு கடும் நெருக்கடி கொடுத்தனர். இறுதியில் இந்திய அணி 2-க்கு 0 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது. இந்த வெற்றியின் மூலம் இந்திய அணி கால் இறுதி வாய்ப்பை ஏறத்தாழ உறுதி செய்தது.
முன்னதாக அர்ஜென்டினா அணிக்கு எதிரான லீக் ஆட்டத்தை 1-க்கு 1 என்ற கணக்கில் இந்திய அணி சமன் செய்தது. அதற்கு முன் நடந்த நியூசிலாந்து அணிக்கு எதிரான மற்றொரு லீக் ஆட்டத்தில் 3-க்கு 2 என்ற கணக்கில் இந்திய அணி வெற்றி பெற்று இருந்தது. இனி இந்திய அணி வரும் ஆகஸ்ட் 1ஆம் தேதி குரூப் பி பிரிவில் உள்ள மற்றொரு அணியான பெல்ஜியத்தை எதிர்கொள்கிறது. இந்த ஆட்டத்தில் சமன் செய்தால் கூட இந்திய அணி எளிதாக கால் இறுதி சுற்றுக்கு முன்னேறும்.
இதையும் படிங்க:பாரீஸ் ஒலிம்பிக்கில் தமிழக வீரர் பிரித்விராஜ் தொண்டைமான் அதிர்ச்சி தோல்வி! - Paris Olympics 2024