பல்லேகலே:இலங்கை அணிக்கு எதிரான இரண்டாவது டி20 போட்டியில் இந்திய அணி டிஎல்எஸ் முறைப்படி ஏழு விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இலங்கை அணி 20 ஓவர்களில் ஒன்பது விக்கெட் இழப்பிற்கு 161 ரன்கள் எடுத்தது.
அந்த அணியின் மூன்றாம் வரிசை வீரர் குசால் பெரேரா மட்டும் அபாரமாக ஆடி அரை சதம் அடித்திருந்தார். அவர் 34 பந்துகளில் 53 ரன்கள் குவித்து இருந்தார். இந்திய அணியில் சிறப்பாக பந்து வீசிய ரவி பிஷ்னோய் 4 ஓவர்களில் 26 ரன்கள் கொடுத்து 3 விக்கெட்களை வீழ்த்தி இருந்தார்.
அக்சர் பட்டேல் 2, அர்ஷ்தீப் சிங் 2, ஹர்திக் பாண்டியா 2 விக்கெட்கள் வீழ்த்தி இருந்தனர். அடுத்து 162 ரன்கள் என்ற இலக்குடன் இந்திய அணி களம் இறங்கியது. இந்திய அணி பேட்டிங் செய்த போது முதல் ஓவரின் இடையே மழை பெய்ததால் போட்டி சிறிது நேரம் தடைப்பட்டது.
அதன் பின் டிஎல்எஸ் முறைப்படி இந்திய அணியின் வெற்றி இலக்கு 8 ஓவர்களில் 78 ரன்கள் என்பதாக மாற்றி அமைக்கப்பட்டது. அடுத்து இந்திய அணி சேஸிங் செய்யத் தொடங்கியது. சஞ்சு சாம்சன் தான் சந்தித்த முதல் பந்திலேயே டக் அவுட் ஆகி அதிர்ச்சி அளித்தார்.
எனினும், ஜெய்ஸ்வால் மற்றும் சூர்யகுமார் யாதவ் அதிரடியாக ஆடினர். சூர்யகுமார் யாதவ் 12 பந்துகளில் 26 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தார். ஜெய்ஸ்வால் 15 பந்துகளில் 30 ரன்கள் எடுத்து வெளியேறினார். நான்காம் வரிசையில் ஹர்திக் பாண்டியா களம் இறங்கினார்.
அவர் தன் பங்கிற்கு அதிரடி காட்டினார். அவர் 9 பந்துகளில் 22 ரன்கள் எடுத்து அணியின் வெற்றியை உறுதி செய்தார். இந்திய அணி 6.3 ஓவர்களில் எல்லாம் 81 ரன்கள் எடுத்து வெற்றி இலக்கை எட்டியது. வெறும் 39 பந்துகளில் இந்திய அணி மூன்று விக்கெட் இழப்பிற்கு 81 ரன்கள் எடுத்திருந்தது.
7 வித்தியாசத்தில் இந்தியா வெற்றி பெற்று மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடரை 2 - 0 என்ற கணக்கில் தொடரைக் கைப்பற்றியது. இந்த போட்டியில் இலங்கை அணியின் முன்னாள் கேப்டன் வனிந்து ஹசரங்கா இந்தியா பேட்ஸ்மேன்களிடம் தர்ம அடி வாங்கினார். அவர் வீசிய இரண்டு ஓவர்களில் மட்டும் 34 ரன்கள் குவித்தது இந்திய அணி.
ஆட்டநாயகன் ரவி பிஷ்னோய்:இந்த போட்டியில் 4 ஓவர்கள் வீசி 26 ரன்கள் மட்டுமே விட்டுக் கொடுத்து 3 விக்கெட்டுகளை கைப்பற்றிய ரவி பிஷ்னோய் ஆட்டநாயகனாக தேர்வு செய்யப்பாட்டர். இந்தியா - இலங்கை அணிகளுக்கு இடையேயான 3வது டி20 போட்டி நாளை (செவ்வாய்க்கிழமை) நடைபெறவுள்ளது.
இதையும் படிங்க:பாரீஸ் ஒலிம்பிக்: இந்தியா மேலும் 3 பதக்கங்கள் வெல்ல வாய்ப்பு.. போட்டிகளின் முழு விவரம்!