பெங்களூரு:இந்தியா சுற்றுப்பயணம் மேற்கொண்டு உள்ள தென் ஆப்பிரிக்க மகளிர் அணி தலா 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் மற்றும் டி20 கிரிக்கெட் போட்டிகள் மற்றும் ஒரேயொரு டெஸ்ட் கிரிக்கெட் தொடரில் விளையாடி வருகிறது. முதலிலி ஒருநாள் கிரிக்கெட் போட்டிகள் தொடங்கிய நிலையில், முதல் இரண்டு ஆட்டங்களில் முறையே இந்திய மகளிர் அணி 143 ரன்கள் மற்றும் 4 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
இந்நிலையில், இவ்விரு அணிகளுக்கு இடையிலான மூன்றாவது மற்றும் கடைசி ஒருநாள் கிரிக்கெட் போட்டி பெங்களூருவில் இன்று (ஜூன்.23) நடைபெற்றது. டாஸ் வென்ற தென் ஆப்பிரிக்க அணியின் கேப்டன் லாரா வோல்வார்ட் பேட்டிங்கை தேர்வு செய்தார். அதன்படி முதலில் களமிறங்கிய தென் ஆப்பிரிக்கா வீராங்கனைகள் லாரா மற்றும் தஸ்மின் பிரிட்ஸ் அபாரமாக விளையாடி அணிக்கு நல்ல தொடக்கத்தை அமைத்துக் கொடுத்தனர்.
முதல் விக்கெட்டுக்கு இந்த ஜோடி 102 ரன்கள் சேர்த்தது. 61 ரன்கள் விளாசிய கேப்டன் லாரா, இந்திய வீராங்கனை அருந்ததி ரெட்டியின் பந்துவீச்சில் அவரிடமே கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார். அதன் பின் களமிறங்கிய தென் ஆப்பிரிக்க வீராங்கனைகள் யாரும் பெரிய அளவில் சோபிக்கவில்லை.
சொற்ப ரன்களில் ஆட்டமிழந்து அடுத்தடுத்து வெளியேறினர். சிறிது நேரம் மட்டுமே நீடித்த மற்றொரு தொடக்க வீராங்கனை தஸ்மின் பிரிட்ஸ் தன் பங்குக்கு 38 ரன்கள் அடித்து கொடுத்து ஆட்டமிழந்தது. இறுதிக் கட்டத்தில் நாடின் டி கிளெர்க் (26 ரன்) மற்றும் மிக்கே டி ரெய்டர் (26 ரன்) ஆகியோ நம்பிக்கை அளிக்கும் வகையில் விளையாடி அணி 200 ரன்களை கடக்க உதவினர்.
50 ஓவர்கள் முடிவில் தென் ஆப்பிரிக்க அணி 8 விக்கெட் இழப்புக்கு 215 ரன்கள் குவித்தது. இந்திய அணி தர்ப்பில் அருந்ததி ரெட்டி மற்றும் தீப்தி ஷர்மா ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினர். ஸ்ரெயங்கா பாடீல் மற்றும் பூஜா வஸ்தரகர் ஆகியோர் தலா 1 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.