பல்லேகலே:இந்திய அணி இலங்கையில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு தலா 3 போட்டிகள் கொண்ட டி20 மற்றும் ஒருநாள் கிரிக்கெட் தொடரில் விளையாடி வருகிறது. இதில் முதல் மற்றும் 2வது டி20 கிரிக்கெட் போடியில் முறையே இந்திய அணி 43 ரன்கள் மற்றும் 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
இந்நிலையில், இவ்விரு அணிகளுக்கு இடையிலான 3வது மற்றும் கடைசி டி20 கிரிக்கெட் போட்டி இன்று (ஜூலை.30) பல்லேகலே மைதானத்தில் இரவு 7 மணிக்கு தொடங்குகிறது. இந்திய அணியை பொறுத்தவரை 2-க்கு 0 என்ற கணக்கில் ஏற்கனவே தொடரை கைப்பற்றியது. இன்றைய ஆட்டத்தில் வெற்றி பெறும் பட்சத்தில் அது இந்திய அணிக்கு கூடுதல் போனசாகும்.
இலங்கை அணியை பொறுத்தவரை தொடக்க வீரர்கள் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய போதும் அடுத்தடுத்து களமிறங்கும் வீரர்கள் சிறப்பாக விளையாட தவறும் நிலையில் அந்த அணி தோல்வி அடைய காரணமாகிறது. இலங்கை தொடக்க வீரர் பதும் நிசங்கா இரண்டு ஆட்டங்களிலும் 111 ரன்கள் டி20 தொடரில் அதிக ரன் குவித்தவர் பட்டியலில் முதலிடத்தில் உள்ளார்.
அதேபோல் குசல் பெரரா, குசல் மென்டிஸ் ஆகியோர் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகின்றனர். அதேநேரம் இலங்கை அணியில் பந்துவீச்சும் பெரிய அளவில் எடுபடவில்லை. மதீச பத்திரனா தவிர்த்து மற்ற வீரர்கள் சற்று திணறுகின்றனர். டி20 தொடரில் ஒயிட் வாஷ் ஆவதை தவிர்க்க இன்றைய ஆட்டத்தில் நிச்சயம் இலங்கை அணி சிறப்பாக செயல்படும்.