மும்பை:இந்தியாவில் சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ள நியூசிலாந்து அணி 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்று விளையாடி வருகிறது. இதன் முதல் 2 போட்டிகளில் தோல்வியடைந்து இந்திய அணி தொடரை இழந்தது. இந்நிலையில் இரு அணிகளுக்கு இடையேயான 3வது டெஸ்ட் போட்டி நேற்று (நவ.1) மும்பை வான்கடே மைதானத்தில் தொடங்கி நடைபெற்று வருகிறது.
இந்தப் போட்டியில் டாஸ் வென்ற நியூசிலாந்து அணி பேட்டிங்கை தேர்வு செய்தது. அதன்படி முதலில் களமிறங்கிய அந்த அணி, 65.4 ஓவர்களில் 235 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. இதில் அதிகபட்சமாக டேரில் மிட்செல் 82 ரன்களும், வில் யங் 71 ரன்களும் எடுத்தனர். இந்திய அணி தரப்பில் ஜடேஜா 5 விக்கெட்டுகளும், வாஷிங்டன் சுந்தர் 4 விக்கெட்டுகளையும் கைப்பற்றி அசத்தினர்.
இதையும் படிங்க:11 ஆண்டுகளுக்கு முன் இதே நாளில் சம்பவம் செய்த ரோகித் சர்மா! அந்த ரோகித் சர்மாவா இது?
இதைத் தொடர்ந்து பேட்டிங் செய்த இந்திய அணி அடுத்தடுத்து விக்கெட் இழந்து தடுமாறியது. இருப்பினும் சுப்மன் கில் 90 ரன், ரிஷப் பந்த் 60 ரன் ஆகியோரின் சிறப்பான ஆட்டத்தால் 263 ரன்கள் சேர்த்த இந்திய அணி, 59.4 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. நியூசிலாந்து அணி தரப்பில் அஜாஸ் படேல் 5 விக்கெட்டுகளையும் மாட் ஹென்றி, க்ளென் பிலிப்ஸ் மற்றும் இஷ் சோதி ஆகியோர் தலா 1 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.
இதனை தொடர்ந்து 28 ரன்கள் பின் தங்கிய நிலையில் 2வது இன்னிங்ஸை தொடங்கிய நியூசிலாந்து அணி ரன்களை குவிக்க்க தடுமாறியது. தொடக்க வீரர் கேப்டன் லாதம் 1 ரன்னில் ஆட்டமிழக்க, டெவோன் கான்வே 22 ரன்னில் வெளியேறினார். ரச்சின் ரவிந்திரா 4 ரன்களும், டேரில் மிட்செ 21 ரன்களும் எடுத்து ஆட்டமிழந்தனர்.
வில் யங் 51 ரன்கள் சேர்த்து அரைசதம் விளாசிய நிலையில் கிளென் பிலிப்ஸ் 26 ரன்களும், இஷ் ஜோதி 8 ரன்களும், மேட் ஹென்றி 10 ரன்களும் எடுத்து வெளியேறினர். 2வது ஆட்ட நேர முடிவில் 9 விக்கெட் இழப்பிற்கு 171 ரன்களை சேர்ந்துள்ள நியூசிலாந்து அணி 143 ரன்கள் முன்னிலை பெற்றுள்ளது.
இந்திய அணி தரப்பில் ஜடேஜா 4 விக்கெட்டுகளும், அஸ்வின் 3 விக்கெட்டுகளையும் கைப்பற்றியுள்ளனர். இன்னும் ஒரு விக்கெட் மட்டுமே மீதமுள்ளதால் விரைவில் விக்கெட்டை வீழ்த்தி சேஸிங் செய்ய இந்தியா காத்திருக்கிறது. 3வது நாள் ஆட்டம் நாளை(ஞாயிற்றுக்கிழமை) காலை 9.30 மணிக்கு தொடங்கவுள்ளது.