டெல்லி:வங்கதேசம் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் மற்றும் மூன்று போட்டிகள் கொண்ட டி20 கிரிக்கெட் தொடரில் விளையாடி வருகிறது. இதில் முதலில் நடைபெற்ற டெஸ்ட் தொடரை இந்திய அணி 2-க்கு 0 என்ற கணக்கில் கைப்பற்றியது.
தொடர்ந்து குவாலியரில் நடைபெற்ற டி20 கிரிக்கெட் தொடரின் முதலாவது ஆட்டத்தில் இந்தியா 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்நிலையில், இந்தியா - வங்கதேசம் அணிகள் இடையிலான 2வது டி20 கிரிக்கெட் போட்டி இன்று டெல்லியில் உள்ள அருண் ஜெட்லி மைதானத்தில் நடைபெறுகிறது.
சூர்யகுமார் யாதவ் தலைமையிலான இந்திய இளம் படை இலங்கை தொடர் முதல் அடுத்தடுத்து வெற்றிகளை குவித்து வருகிறது. இன்றைய ஆட்டத்திலும் இந்திய அணி வெற்றி பெற்று தொடரை கைப்பற்றும் என எதிர்பார்க்கப்படுகிறது. முதலாவது ஆட்டத்தில் மயங்க் யாதவ், மற்றும் நிதிஷ் ரெட்டி ஆகியோர் இந்திய அணியில் முதல் முறையாக அறிமுகமாகினர்.
இன்றைய ஆட்டத்திலும் இருவருக்கும் மீண்டும் வாய்ப்பு வழங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. மற்றபடி இந்திய அணியில் பெரிய அளவில் மாற்றம் இருக்காது எனக் கருதப்படுகிறது. அதேநேரம் நஜ்முல் ஹூசைன் சான்டோ தலைமையிலான வங்கதேச அணி இந்த டி20 தொடரை இழக்கக் கூடாது என்றால் இன்றைய ஆட்டத்தில் வெற்றி பெற்றாக வேண்டிய கட்டாயத்தில் உள்ளது.