டெல்லி: மியாமி ஓபன் டென்னிஸ் தொடர் அமெரிக்காவில் நடைபெற்றது. இதில் ஆடவருக்கான தகுதி சுற்றுப் போட்டியில் இந்திய வீரர் சுமித் நாகல், கனடாவை சேர்ந்த கேப்ரியல் டயல்லோவை எதிர்கொண்டார். ஆரம்பம் முதலே அதிரடியாக காட்டி வந்த சுமித் நாகல், கனடா வீரருக்கு கடும் எதிர்ப்பு காட்டினார்.
அதேநேரம் கனடாவின் கேப்ரியலும், சுமித் நாகலுக்கு கடும் நெருக்கடி கொடுத்து வந்தார். இருப்பினும் முதலாவது செட்டை சுமித் நாகல் 7க்கு 6 என்ற டை பிரேக்கர் மூலம் கைப்பற்றினார். தொடர்ந்து 2வது செட்டில் அதிரடியாக விளையாடிய சுமித் நாகல், எதிரணி வீரரை மேற்கொண்டு முன்னேறவிடாமல் கடும் கெடுபிடியாக விளையாடினார்.
இறுதியில் 2வது செட்டை 6-க்கு 2 என்ற கணக்கில் சுமித் நாகல் கைப்பற்றினார். மொத்தமாக 7-க்கு 6, 6-க்கு 2 என்ற நேர் செட் கணக்கில் சுமித் நாகல் அபார வெற்றி பெற்று அடுத்த சுற்றுக்கு தகுதி பெற்றார். மியாமி ஓபன் டென்னிஸ் தொடரில் சுமித் நாகல் தனது முதல் வெற்றியை பதிவு செய்து உள்ளார்.
முன்னதாக கடந்த பிப்ரவரி மாதம் இந்தியாவில் நடைபெற்ற சென்னை ஓபன் டென்னிஸ் தொடரிலும் சுமித் நாகல் சாம்பியன் பட்டத்தை கைப்பற்றி இருந்தார். தொடர் வெற்றியின் மூலம் ஏடிபி சர்வதேச டென்னிஸ் வீரர்கள் தரவரிசையிலும் சுமித் நாகல் முன்னிலை பெற்று உள்ளார். உலக தரவரிசையில் தற்போது சுமித் நாகல் 92வது இடத்தை கைப்பற்றி உள்ளார்.
இதையும் படிங்க :மத்திய அமைச்சர் பசுபதி பராஸ் ராஜினாமா! என்ன காரணம்? ஜனநாயக கூட்டணியில் இருந்தும் விலகலா?