ஐதராபாத்: இந்தியாவுக்கு எதிரான 3வது மற்றும் கடைசி டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் 25 ரன்கள் வித்தியாசத்தில் நியூசிலாந்து அணி வெற்றி பெற்றது. மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை நியூசிலாந்து 3-க்கு 0 என்ற கணக்கில் கைப்பற்றி இந்தியாவை ஒயிட் வாஷ் செய்தது. இந்த தோல்வியால் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தரவரிசையில் இந்திய அணி சறுக்கலை எதிர்கொண்டுள்ளது.
நியூசிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரை இழந்ததை அடுத்து இந்திய அணி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தரவரிசையில் முதல் இடத்தில் இருந்து இரண்டாவது இடத்திற்கு இறங்கி உள்ளது. இரண்டாவது இடத்தில் இருந்த ஆஸ்திரேலிய அணி முதலிடத்திற்கு முன்னேறியது. ஆஸ்திரேலிய அணி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரில் இன்னும் 7 போட்டிகளில் விளையாட வேண்டி உள்ளது.
அதேநேரம் இந்திய அணி இந்த மாத இறுதியில் ஆஸ்திரேலியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் கொண்ட பார்டர் கவாஸ்கர் டிராபி டெஸ்ட் கிரிக்கெட் தொடரில் விளையாடுகிறது. அதேநேரம் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தரவரிசையில் நியூசிலாந்து அணி மீண்டும் 4வது இடத்திற்கு முன்னேறியது.
கடந்த வாரம் வங்கதேச அணியை ஒயிட் வாஷ் செய்த தென் ஆப்பிரிக்கா அணி நியூசிலாந்திடம் இருந்து 4வது இடத்தை கைப்பற்றி இருந்தது. தற்போது இந்திய தொடரை கைப்பற்றிய நிலையில் நியூசிலாந்து மீண்டும் 4வது இடத்திற்கு முன்னேறி உள்ளது. பார்டர் கவாஸ்கர் தொடரில் குறைந்தபட்சம் 4 போடிகளை கைப்பற்றினால் மட்டுமே இந்திய அணி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரின் இறுதிப் போட்டிக்குள் நுழைய முடியும்.