டெல்லி: வயது மூப்பு காரணமாக உடல்நிலை குன்றி சிகிச்சை பெற்று வந்த முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் (92) நேற்று இரவு காலமானார். அவரின் உடல் அரசியல் தலைவர்கள், பொது மக்களின் அஞ்சலிக்காக டெல்லியில் உள்ள அவரது வீட்டில் வைக்கப்பட்டுள்ளது. அஞ்சலி முடிந்து நாளை (டிச.28) அவருடைய உடல் நல்லடக்கம் செய்யப்படுகிறது. அவருடைய உடலுக்கு இந்திய பிரதமர் நரேந்திர மோடி உள்ளிட்ட அரசியல் கட்சித் தலைவர்கள், அஞ்சலி செலுத்தினர்.
அதேபோல டெல்லி சென்ற தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மன்மோகன் சிங் உடலுக்கு மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்திய பின்னர் மன்மோகன் சிங்கின் குடும்பத்தினரை சந்தித்து ஆறுதல் கூறினார்.
இந்த நிகழ்வின் போது நாடாளுமன்ற உறுப்பினர்கள் கனிமொழி, டி.ஆர். பாலு, ஆ.ராசா, தயாநிதி மாறன், திருச்சி சிவா மற்றும் தமிழ்நாடு அரசின் டெல்லி சிறப்பு பிரதிநிதி ஏ.கே.எஸ். விஜயன் ஆகியோர் உடன் இருந்தனர்.
நாட்டிற்கே மிகப்பெரிய இழப்பு
அஞ்சலி செலுத்திய பின் முதலமைச்சர் ஸ்டாலின் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது அவர், பொருளாதார நிபுணரும், முன்னாள் இந்திய பிரதமருமான மன்மோகன் சிங்கின் இழப்பானது காங்கிரஸ் பேரியக்கத்திற்கு மட்டுமல்ல, இந்திய நாட்டிற்கே மிகப்பெரிய இழப்பாகும். தமிழ்நாட்டினுடைய உட்கட்டமைப்பு வசதிகளை பெருக்குவதற்கும், பல்வேறு திட்டங்களை உருவாக்கித் தருவதற்கும் துணை நின்றிருக்கிறார்.
இதையும் படிங்க: ஜனநாயகத்திற்கு மிகப்பெரிய இழப்பு - மன்மோகன் சிங்கிற்கு கனிமொழி எம்பி, ரஜினி இரங்கல்!
முக்கிய திட்டங்கள்
குறிப்பாக சொல்ல வேண்டும் என்றால் மதுரவாயல் பறக்கும் சாலை திட்டமாக இருந்தாலும், தமிழகத்தில் போக்குவரத்து நெரிசலை குறைக்கக்கூடிய வகையில் சாலை கட்டமைப்பு வசதிகளை ஏற்படுத்துவதாக இருந்தாலும் சரி, அதே போல் 100 நாட்கள் வேலைத்திட்டம் என்கின்ற ஒரு புரட்சிகரமான திட்டத்தை கொண்டு வந்து அறிமுகப்படுத்தியவர்.
எல்லாவற்றையும் தாண்டி, தமிழர்களுடைய பல ஆண்டு கால கனவாக இருந்து வந்த தமிழ் மொழிக்கு செம்மொழி அந்தஸ்தை சோனியா காந்தியின் துணையோடு அறிவித்து நிறைவேற்றித் தந்தவர். கலைஞர் கருணாநிதியோடு நெருங்கி நட்புணர்வோடு பழகக்கூடியவராக இருந்தவர். அவர் மறைந்து விட்டார் என்பது வேதனைக்குரிய ஒன்று. அவரை இழந்து வாடும் அவருடைய குடும்பத்தாருக்கும், காங்கிரஸ் பேரியக்கத்திற்கும், திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் என்னுடைய ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன்.
இன்றைக்கு மெட்ரோ ரயில் திட்டம் தமிழ்நாட்டிற்கு வந்திருக்கிறது என்றால், அதற்கு காரணம் அவர் தான். கடல் நீரை குடிநீராக்கும் திட்டம் கொண்டு வந்ததற்கும் அவர் தான் காரணம். அதேபோல், சேது சமுத்திரத் திட்டத்தை கொண்டு வருவதற்கும் அவர் தான் காரணமாக இருந்தார். ஆனால், இடையிலேயே அத்திட்டம் நின்று விட்டது. இதுபோன்ற பல்வேறு திட்டங்கள் தமிழ்நாட்டிற்கு வருவற்கு அவர் தான் காரணமாக இருந்திருக்கிறார்'' என தெரிவித்தார்.