கேபெர்ஹா:தென்னாப்பிரிக்கா சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் பங்கேற்று விளையாடி வருகிறது. இரு அணிகளுக்கு இடையே முதலாவது டி20 போட்டியில் 61 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்தநிலையில் இந்தியா - தென்னாப்பிரிக்கா அணிகளுக்கு இடையிலான 2வது டி20 போட்டி, செயின்ட் ஜார்ஜ் பார்க் மைதானத்தில் நடைபெற்று வருகிறது.
இந்தப் போட்டியில் டாஸ் வென்ற தென்னாப்பிரிக்கா அணி கேப்டன் எய்டன் மார்க்ரம் பவுலிங்கை தேர்வு செய்தார். அதன்படி முதலில் களமிறங்கிய இந்திய அணி பவர்பிளே முடிவதற்குள் 3 விக்கெட்டுகளை இழந்தது. கடந்த முறை சதம் விளாசிய சஞ்சு சாம்சன் இந்த முறை டக் அவுட் ஆகி ஏமாற்றம் அளித்தார்.
இதையும் படிங்க:சிக்கலில் சென்னை சூப்பர் கிங்ஸ்! ஆட்டம் கண்டுள்ள சென்னை அணி நிர்வாகம்? என்ன நடந்தது?
மற்றொரு ஓப்பனிங் பேட்ஸ்மேனான அபிஷேக் சர்மா 4 ரன்களுக்கும், கேப்டன் சூர்யகுமார் யாதவ் 4 ரன்களுக்கும் விக்கெட் இழந்து பெவிலியன் திரும்பினர். இதன் பின்னர் களமிறங்கிய திலக் வர்மா (20 ரன்), அக்சர் படேல் (27ரன்), ரிங்கு சிங்( 9) என அடுத்தடுத்து வெளியேறினர். இதனால் 15.2 ஓவர்களில் 87 ரன்களுக்கு குவித்த இந்திய அணி 6 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது.
இதன் பின்னர் களமிறங்கிய ஹர்திக் பாண்டியா நிதனமான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். இறுதி வரை களத்திலிருந்த அவர் 4 பவுண்டரி 1 சிக்ஸர்களுடன் 39 ரன்கள் விளாசினார். இதன் மூலம் 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட் இழப்பிற்கு 124 ரன்கள் குவித்துள்ளது இந்தியா. தென்னாப்பிரிக்கா அணி தரப்பில் மார்கோ ஜான்சன், பீட்டர், கேப்டன் எய்டன் மார்க்ரம் மற்றும் ஜெரால்ட் கோட்ஸி, ஆண்டிலே சிமெலேன் ஆகியோர் தலா 1 விக்கெட்டுகளை கைப்பற்றினர். தற்போது 125 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் தென்னாப்பிரிக்க அணி விளையாடி வருகிறது.