ஹைதராபாத்: இங்கிலாந்து அணி இந்தியா சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் விளையாடி வருகிறது. இத்தொடரின் முதல் போட்டி நேற்று (ஜன.25) ஹைதராபாத் மைதானத்தில் தொடங்கி நடைபெற்று வருகின்றது.
டாஸ் வென்ற இங்கிலாந்து அணியின் கேப்டன் பென் ஸ்டோக்ஸ் பேட்டிங்கை தேர்வு செய்தார். அதன்படி முதலில் இங்கிலாந்து அணி பேட்டிங் செய்தது. ஆனால் இந்திய அணியின் சுழற்பந்து வீச்சை எதிர்கொள்ள முடியாத இங்கிலாந்து அணி அடுத்தடுத்து விக்கெட்களை இழந்தது.
கேப்டன் பென் ஸ்டோக்ஸ் மட்டுமே அதிகபட்சமாக 70 ரன்கள் எடுத்தார். இங்கிலாந்து அணி முதல் இன்னிங்ஸின் முடிவில் 246 ரன்கள் சேர்த்தது. இந்திய அணியின் சார்பில் ரவீந்திர ஜடேஜா மற்றும் ரவிச்சந்திரன் அஷ்வின் தலா 3 விக்கெட்களை வீழ்த்தி அசத்தினர். மற்ற பந்து வீச்சாளர்களான ஜஸ்பிரித் பும்ரா மற்றும் அக்சர் படேல் தலா 2 விக்கெட்களையும் கைப்பற்றினர்.
இதனைத் தொடர்ந்து இந்திய அணி தனது முதல் இன்னிங்ஸை விளையாட தொடங்கியது. முதல் நாள் முடிவில் இந்திய அணி 1 விக்கெட் இழப்பிற்கு 119 ரன்கள் எடுத்தது. ரோகித் சர்மா 24 ரன்களில் ஆட்டமிழந்து வெளியேறினார். அதிரடி காட்டிய யஷஸ்வி ஜெய்ஸ்வால் 76 ரன்களுடனும், சுப்மன் கில் 14 ரன்களுடனும் ஆட்டமிழக்காமல் களத்தில் இருந்தனர்.
இந்த நிலையில் இன்று (ஜன.26) போட்டியின் இரண்டாவது நாள் தொடங்கியது. சிறப்பாக விளையாடி ரன்களை சேர்த்த ஜெய்ஸ்வால் 80 ரன்களில் ஆட்டமிழந்தார். அதனைத் தொடர்ந்து கில் 23, ஸ்ரேயாஸ் 35, கே.எல்.ராகுல் 86, கே.எஸ்.பரத் 41 ரன்களிலும் ஆட்டமிழந்தனர். ஆனால் மறுபுறம் சிறப்பாக விளையாடி வந்த ரவீந்திர ஜடேஜா அரைசதம் கடந்து ஆட்டமிழக்காமல் 81 ரன்களுடன் களத்தில் உள்ளார். அவருடன் அக்சர் படேல் 35 ரன்களுடன் களத்தில் உள்ளார்.
இந்திய அணி இரண்டாவது நாள் முடிவில் 7 விக்கெட்கள் இழப்பிற்கு 421 ரன்கள் எடுத்து 175 ரன்கள் முன்னிலையில் உள்ளது. இங்கிலாந்து அணியின் சார்பில் அதிகபட்சமாக ஜோ ரூட் மற்றும் டாம் ஹார்ட்லி தலா 2 விக்கெட்கள் எடுத்துள்ளனர்.
இதையும் படிங்க:ஐசிசியின் ஒருநாள் கிரிக்கெட்டின் சிறந்த வீரருக்கான விருது; 4வது முறையாக வென்ற விராட் கோலி!