ஐதராபாத்: 9வது டி20 உலக கோப்பை கிரிக்கெட் தொடர் ஜூன் 2ஆம் தேதி தொடங்கி அமெரிக்கா மற்றும் மேற்கு இந்திய தீவுகள் ஆகிய நாடுகளில் நடைபெறுகின்றன. ஏறத்தாழ 20 அணிகள் நடப்பு டி20 உலக கோப்பை கிரிக்கெட் தொடரில் விளையாடுகின்றன. 20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட் வரலாற்றில் அதிகபட்ச அணிகள் பங்கேற்பது இதுவே முதல் முறையாகும்.
இந்திய அணி தனது முதலாவது லீக் ஆட்டத்தில் வரும் ஜூன் 5ஆம் தேதி அயர்லாந்து அணியை எதிர்கொள்கிறது. கடைசியாக இந்திய அணி கடந்த 2013ஆம் ஆண்டு டோனி தலைமையில் சாம்பியன்ஸ் டிராபி கோப்பையை கைப்பற்றியது. அதன்பின் ஏறத்தாழ 14 ஆண்டுகளாக மீண்டும் ஒரு சர்வதேச கோப்பையை கைப்பற்றும் ஏக்கத்தில் இந்திய அணி திளைக்கிறது.
இதுவரை நடைபெற்ற 8 டி20 உலக கோப்பை கிரிக்கெட் தொடர்களிலும் விளையாடியுள்ள இந்திய அணி, முதல் முறையாக கடந்த 2007ஆம் ஆண்டு மகேந்திர சிங் டோனி தலைமையில் கோப்பையை வென்று இருந்தது. இந்நிலையில், இந்த முறை ரோகித் சர்மா தலைமையிலான இளம் இந்திய படை மீண்டும் கோப்பையை வெல்லும் முனைப்பில் உள்ளது.
இந்திய அணியை ரோகித் சர்மா வழிநடத்தும் நிலையில், துணை கேப்டனாக ஹர்திக் பாண்டியா நியமிக்கப்பட்டுள்ளார். இளம் வீரர்களை கொண்ட இந்திய படை ஒட்டுமொத்த அணிகளுடன் ஒப்பிடுகையில் சக்தி வாய்ந்த அணியாக காணப்படுகிறது. இந்திய அணியின் பேட்டிங் வரிசையை ரோகித் சர்மா, சூர்யகுமார் யாதவ், ஹர்திக் பாண்ட்யா, ரவீந்திர ஜடேஜா உள்ளிட்டோர் பலப்படுத்த, பவுலிங் பிரிவை ஜஸ்பிரீத் பும்ரா, அர்ஷ்தீப் சிங், முகமது சிராஜ் ஆகியோர் வலுப்படுத்துகின்றனர்.
இந்நிலையில், கடந்த 20 ஓவர் உலக கோப்பை தொடர்களில் இந்திய அணி மேற்கொண்ட சாதனை மைல்கல்கள் குறித்து விரிவாக பார்க்கலாம்.
2007 உலக கோப்பையில் வெற்றி வாகை சூடிய இந்தியா:
கடந்த 2007ஆம் ஆண்டு சர்வதேச அளவில் முதல் முறையாக 20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட் தொடர் அறிமுகப்படுத்தப்பட்டது. அப்போது இந்திய அணியின் கேப்டனாக மகேந்திர சிங் டோனி இருந்தார். சீனியர் வீரர்கள் இல்லாத சூழலில் இளம் படையுடன் களமிறங்கிய இந்திய அணி இறுதிப் போட்டியில் பாகிஸ்தானை எதிர்கொண்டது.
இறுதி ஓவரில் 13 ரன்கள் மட்டுமே பாகிஸ்தான் அணியின் வெற்றிக்கு தேவைப்பட்ட நிலையில், அதிரடி நாயகன் மிஸ்பா உல் ஹக்கின் விக்கெட்டை வீழ்த்தி வெற்றி வாகை சூடியது இந்திய அணி. 20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட் தொடர் அறிமுகப்படுத்தப்பட்ட முதல் முறையே இந்திய அணி சாம்பியன் பட்டத்தை கைப்பற்றியது.
நாக் அவுட் சுற்றுகளில் இந்தியாவின் தடுமாற்றம்?
தொடர்ந்து கடந்த 2014ஆம் அண்டு வங்கதேசத்தில் நடைபெற்ற 5வது டி20 உலக கோப்பை கிரிக்கெட் தொடரின் இறுதி ஆட்டத்தில் இந்திய அணி, இலங்கையை எதிர்கொண்டது. தொடர் முழுவதும் தனத் அபார ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்த விராட் கோலி, இறுதி போட்டியிலும் 77 ரன்கள் குவித்து அணிக்கு பலம் சேர்த்தார்.