துபாய் :நடப்பாண்டுக்கான உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் கிரிக்கெட் தொடரில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில், உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் கிரிக்கெட் தொடருக்கான தரவரிசை பட்டியலை சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலான ஐசிசி வெளியிட்டு உள்ளது. அதில், நியூசிலாந்தை பின்னுக்குத் தள்ளி இந்திய அணி மீண்டும் முதல் இடத்தை பிடித்து உள்ளது.
இங்கிலாந்து அணிக்கு எதிராக ராஞ்சியில் நடைபெற்ற 4வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று தொடரை 3-க்கு 1 என்ற கணக்கில் முன்னிலை பெற்றது. அதேநேரம் ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் நியூசிலாந்து அணி 172 ரன்கள் வித்தியாசத்தில் படுதோல்வியை தழுவியது.
இதனால் தரவரிசை பட்டியலில் நியூசிலாந்து அணி சறுக்கலை கண்டு உள்ளது. இந்திய அணி 5 வெற்றி, இரண்டு தோல்வி, 1 டிரா என 8 ஆட்டங்களில் விளையாடி 62 புள்ளிகளுடன் முதலிடத்தில் நீடிக்கிறது. அதேநேரம் நியூசிலாந்து அணி 3 வெற்றி, 2 தோல்விகளுடன் தரவரிசையில் இரண்டாவது இடத்தில் உள்ளது.
மூன்றாவது இடத்தில் ஆஸ்திரேலிய அணி உள்ளது. 11 ஆட்டங்களில் விளையாடி உள்ள ஆஸ்திரேலிய அணி 7 வெற்றி, 3 தோல்வி, ஒரு டிராவுடன் தரவரிசை பட்டியலில் மூன்றாவது இடத்தில் உள்ளது. 2023 ஆண்டு உலக சாம்பியான நியூசிலாந்து அணி மீண்டும் முதலிடத்தை பிடிக்க வேண்டுமானால் வரும் மார்ச் 8 ஆம் தேதி கிறிஸ்ட்சர்ச்சில் நடைபெறும் 2வது மற்றும் கடைசி டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் ஆஸ்திரேலிய அணியை கட்டாயம் விழ்த்தியாக வேண்டிய கட்டாயத்தில் உள்ளது.