பல்லகெலே:இலங்கை சென்றுள்ள இந்திய அணி 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் பங்கேற்றது. இதன் முதல் முதல் போட்டியில் 43 ரன்கள் வித்தியாசத்திலும், 2வது டி20 போட்டியில் 7 விக்கெட் வித்தியாசத்திலும் இந்திய அணி வெற்றி பெற்று, தொடரை 2-0 என்ற கணக்கில் கைப்பற்றி இருந்தது.
இந்த நிலையில் 3-வது மற்றும் கடைசி டி-20 கிரிக்கெட் போட்டி பல்லகெலேவில் நேற்று நடந்தது. இந்த போட்டியில் டாஸ் வென்ற இலங்கை அணி, பந்து வீச்சை தேர்வு செய்தது. அதன்படி முதலில் களமிறங்கிய இந்திய அணி, இலங்கை அணியின் பந்து வீச்சை எதிர் கொள்ள முடியாமல் திணறியது.
இருப்பினும் சுப்மன் கில்(39 ரன்), ரியான் பராக்(26 ரன்) மற்றும் வாஷிங்டன் சுந்தர்(25 ரன்)ஆகியோர் பங்களிப்பால், 9 விக்கெட்டுகள் இழப்பிற்கு 137 ரன்களை குவித்தது இந்திய அணி. இலங்கை அணி தரப்பில் மஹீஸ் தீக்சனா 3 விக்கெட்டுகளையும், ஹசரங்கா 2 விக்கெட்டுகளையும் கைப்பற்றி அசத்தினர்.
138 இலக்கு:இதனையடுத்து 138 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கியது இலங்கை அணி. தொடக்க ஆட்ட காரர்களாகக் களமிறங்கிய பதும் நிசங்கா மற்றும் குசால் மெண்டீஸ் ஆகிய இருவரும் 58 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்தனர்.
இதில், பதும் நிசங்கா 25 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். இதனையடுத்து குசல் பெரேரா மற்றும் குசால் மெண்டீஸ் ஜோடி சேர்ந்து அணியை வெற்றி பாதைக்கு அழைத்துச் சென்றனர். பின்னர், குசால் மெண்டீஸ் 43 ரன் மற்றும் குசல் பெரேரா 46 ரன்களுக்கு விக்கெட்டுகளை பறிகொடுத்தனர்.
அதாவது 117 ரன்களுக்கு 3 விக்கெட் இழந்து இருந்த இலங்கை அணி சுலபமாக வெற்றி பெற்றுவிடும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் மைதானம் சுழற்பந்து வீச்சாளர்களுக்கு சாதகமாக உள்ளது என கணித்த கேப்டன் சூர்யகுமார் யாதவ், போட்டியின் 18வது ஓவரை வீச ரிங்கு சிங் அழைத்தார்.
மேட்ச் டிரா:அந்த ஓவரில் 3 ரன்களை மட்டுமே விட்டுக் கொடுத்த ரிங்கு சிங், 2 விக்கெட்டுகளை கைப்பற்றினர். கடைசி ஓவரில் 6 ரன்கள் தேவை என்ற நிலை இருந்தது. இந்த நிலையில் யாரும் எதிர்பாராத விதமாக அந்த ஓவரை சூர்யகுமார் யாதவ் வீசினார். கடைசி ஓவரில் 2 விக்கெட்டுகளை கைப்பற்றிய அவர் வெறும் 5 ரன்களை மட்டுமே விட்டுக் கொடுத்தார். இதனால் போட்டி சமனில் முடிந்தது. இதனால் சூப்பர் ஓவர் முறை பின்பற்றப்பட்டது. இதில் முதலில் பேட்டிங் செய்த இலங்கை அணி, 3 பந்துகளை மட்டுமே எதிர்கொண்டு 2 ரன்களை மட்டும் எடுத்து 2 விக்கெட்டுகளையும் இழந்தது.
த்ரில் வெற்றி:இதனையடுத்து 3 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற எளிய இலக்குடன் களமிறங்கிய இந்திய அணியின் சூர்யகுமார் யாதவ், தான் சந்தித்த முதல் பந்தையே பவுண்டரிக்கு விளாசினார். இதன் மூலம் சூப்பர் ஓவரில் இந்திய அணி வெற்றி பெற்றது. அத்துடன் தொடரை 3-0 என்ற கணக்கில் கைப்பற்றி, இலங்கை அணியை அதன் சொந்த மண்ணில் ஒயிட் வாஷ் செய்தது இந்தியா.
ஆட்டநாயகன்:இந்த போட்டியில் இந்திய அணியின் ஆல்ரவுண்டரான வாஷிங்டன் சுந்தர் ஆட்டநாயகனாகத் தேர்வு செய்யப்பட்டர். 25 ரன்கள் விளாசிய அவர், 2 விக்கெட்டுகளை கைப்பற்றினர். மேலும் சூப்பர் ஓவரில் கட்டுக்கோப்பாகப் பந்துவீசி அந்த ஓவரிலும் 2 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.
இதையும் படிங்க:பாரீஸ் ஒலிம்பிக் 2024: 5வது நாளில் யார் யாருக்கு போட்டிகள்! முழு விபரம்!