சென்னை:டி20 உலகக் கோப்பையின் ஆப்கானிஸ்தான் மற்றும் தென் ஆப்ரிக்கா ஆகிய அணிகள் விளையாடிய முதல் அரையிறுதிப் போட்டியில் தென் ஆப்பிரிக்கா 9 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று இறுதி ஆட்டத்திற்கு முன்னேறியது. இந்நிலையில், இரண்டாவது அரையிறுதிப் போட்டியில் இன்று இந்தியா, இங்கிலாந்து அணியை எதிர்கொள்கிறது. இரு சமபலம் வாய்ந்த அணிகள் அரையிறுதிப் போட்டியில் மோதுவதால் ரசிகர்கள் போட்டியை காண ஆவலுடன் உள்ளனர்.
இந்நிலையில், போட்டி நடைபெறவுள்ள கயானாவில் மழை பெய்ய 80 சதவீதம் வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மழை காரணமாக இந்திய அணி நேற்றைய பயிற்சியையும் கைவிட்டது. இந்த போட்டிக்கு ரிசர்வ் டே வழங்கப்படவில்லை. ஏனெனில், இந்த போட்டி கயானாவின் உள்ளூர் நேரப்படி 27ஆம் தேதி காலை 10.30 மணிக்கு நடைபெறவுள்ளது. ஒருவேளை இந்த போட்டிக்கு ரிசர்வ் டே கொடுக்கப்பட்டால், போட்டி 28ஆம் தேதியில் நடைபெறும். இதில் சிக்கல் என்னவென்றால், இந்தியா, இங்கிலாந்து போட்டியில் வெல்லும் அணி இடைவெளி எதுவும் இல்லாமல் 29ஆம் தேதி நடைபெறும் இறுதி ஆட்டத்தில் பங்கேற்கும் நிலை ஏற்படும்.