ஐதராபாத்: இந்தியா - வங்கதேசம், நியூசிலாந்து - இலங்கை அணிகளுக்கு இடையிலான டெஸ்ட் கிரிக்கெட் தொடர் நிறைவு பெற்றதை அடுத்து சர்வதேச டெஸ்ட் தரவரிசை பட்டியலை ஐசிசி வெளியிட்டுள்ளது. இதில் பந்துவீச்சாளர்கள் தரவரிசையில் முதலிடத்தில் இருந்த தமிழக வீரர் அஸ்வினை பின்னுக்குத் தள்ளி மற்றொரு இந்திய வீரர் ஜஸ்பிரீத் பும்ரா முதலிடத்தை பிடித்தார்.
அதேபோல் பேட்ஸ்மேன்கள் தரவரிசையில் இந்திய தொடக்க வீரர் யஷஸ்வி ஜெய்ஸ்வால் மூன்றாவது இடத்திற்கு முன்னேறினார். வங்கதேசத்திற்கு எதிரான கான்பூர் டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் பும்ரா ஆறு விக்கெட்டுகளை வீழ்த்தினார். அஸ்வின் ஐந்து விக்கெட்டுகள் வீழ்த்திய நிலையில், 1 புள்ளி வித்தியாசத்தில் பும்ராவிடம் முதலிடத்தை பறிகொடுத்தார்.
அதேபோல் வங்கதேச வீரர்கள் மெஹிதி ஹசன் நான்கு இடங்கள் முன்னேறி 18வது இடத்திலும், ஆல் ரவுண்டர் ஷகிப் அல் ஹசன் 5 இடங்கள் முன்னேற்றம் கண்டு 28வது இடத்திலும் உள்ளனர். நியூசிலாந்து அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் மொத்தம் 18 விக்கெட் வீழ்த்திய இலங்கை வீரர் பிரபத் ஜெயசூர்யா இதுவரை இல்லாத வகையில் டெஸ்ட் பந்துவீச்சாளர்கள் தரவரிசையி 11வது இடத்தை பிடித்துள்ளார்.