ஐதராபாத்: 2025 - 27 ஐபிஎல் சீசன்களுக்கான விதிமுறை பட்டியலை அண்மையில் ஐபிஎல் நிர்வாகம் வெளியிட்டது. அதன்படி ஒவ்வொரு அணியும் ஏறத்தாழ 5 வீரர்களை தக்கவைக்க அனுமதிக்கப்பட்டு உள்ளது. இது தவிர ஆர்டிம் எனப்படும் ரைட் டு மேட்ச் விதியின் கீழ் ஒரு வீரரையும் தக்கவைக்க அனுமதிக்கப்பட்டுள்ளது.
இதில் தக்கவைக்கப்படும் முதல் மூன்று வீரர்களுக்கு முறையே ரூ.18 கோடி, ரூ.14 கோடி மற்றும் 11 கோடி ரூபாய் ஊதியமாக வழங்க தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், இந்த முறை 4 மற்றும் ஐந்தாவதாக தக்கவைக்கப்படும் வீரர்களுக்கான ஊதியத்தையும் உயர்த்தி ஐபிஎல் நிர்வாகம் நடவடிக்கை எடுத்துள்ளது.
பெங்களூருவும் விராட் கோலியும்:
அதப்படி, 4வது தக்கவைப்பு வீரருக்கு ரூ.18 கோடியும், 5வது வீரருக்கு ரூ.14 கோடியும் வழங்க உத்தரவிடப்பட்டுள்ளது. மேலும் அவரும் 31ஆம் தேதிக்கு அணிகள் தங்களது தக்கவைப்பு வீரர்களின் பட்டியலை இறுதி செய்ய வேண்டும் என பிசிசிஐ உத்தரவிட்டுள்ளது. அதன்படி பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் அணியின் நட்சத்திர வீரரான விராட் கோலி நிச்சயம் அந்த அணியால் தக்கவைக்கப்படுவார்.
இந்நிலையில், ஐபிஎல் திருத்தப்பட்ட விதிமுறைகளால் விராட் கோலியின் சம்பளம் கணிசமாக உயருகிறது. கடந்த 2008ஆம் ஆண்டு முதல் பெங்களூரு அணியில் விராட் கோலி அங்கம் வகித்து வருகிறார். இதனிடையே 2013 முதல் 2021 வரை பெங்களூரு அணியின் கேப்டன் பொறுப்பையும் அவர் வகித்து வந்தார்.
ரூ.3 கோடி கோலிக்கு லாபம்:
2025 ஐபிஎல் சீசனில் பெங்களூரு அணியின் தக்கவைப்பு வீரர்கள் பட்டியலில் விராட் கோலியின் பெயர் முதலிடத்தில் இருக்கும் என்பதில் துளியும் சந்தேகமில்லை. கடைசியாக 2022ஆம் ஆண்டு மெகா ஏலத்தின் போது விராட் கோலி பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் அணியால் 15 கோடி ரூபாய் தொகைக்கு தக்கவைக்கப்பட்டார்.
இந்நிலையில், தற்போதைய ஐபிஎல் விதிமுறைகளின் படி முதலாவது தக்கவைப்பு வீரருக்கு அணி நிர்வாகம் 18 கோடி ரூபாயை ஊதியமாக வழங்க வேண்டும். அதன்படி விராட் கோலி ஏறத்தாழ 3 கோடி ரூபாய் வரை கூடுதலாக சம்பளம் உயர்வு பெறுவார் எனக் கணிக்கப்பட்டுள்ளது. அதேநேரம் விராட் கோலியை ஆர்சிபி நிர்வாகம் கழற்றிவிடும் பட்சத்தில் அவர் ஏலத்தில் கலந்து கொண்டால் 20 கோடி ரூபாய்க்கு மேல் ஏலம் போவார் என்பதில் துளியும் சந்தேகமில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
பாப் டு பிளெசிஸ் நிலை என்ன?:
விராட் கோலியை தொடர்ந்து ஆஸ்திரேலிய வீரர் கேமரூன் கிரீனை தங்கள் பக்கம் இழுக்க ஆர்சிபி திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. டிரேட் மூலம் அவர் 17 கோடியே 50 லட்ச ரூபாய் தொகைக்கு பெங்களூரு அணியில் இணைந்தது குறிப்பிடத்தக்கது. பெங்களூரு அணியின் இரண்டாவது தேர்வாக அவர் இருக்கக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.
அப்படி இருக்கும் பட்சத்தில் அவர் ரூ.14 கோடி சம்பளம் பெறலாம். அதேநேரம், கடந்த இரண்டு மூன்று சீசன்களாக கேப்டன் பொறுப்பை வகிக்கும் பாப் டு பிளெசிஸ்சை பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் அணி தக்கவைக்குமா என்ற சந்தேகம் எழுந்துள்ளது.
இதையும் படிங்க:26 வயதில் உயிரிழந்த கென்ய தடகள சாம்பியன்! என்னக் காரணம்?