தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / sports

ஐபிஎல் அணிகளுக்கு வருமானம் எப்படி வருகிறது? - ipl money making - IPL MONEY MAKING

IPL Money Making: ஐபிஎல் என்றாலே பணம் கொழிக்கும் விளையாட்டு என்பது அனைவருக்கும் தெரியும். வீரர்கள் கோடிக்கணக்கான ரூபாய் பணம் கொடுத்து ஏலத்தில் எடுக்கப்படுவதையும் பார்த்திருப்போம். ஆனால், இந்த அணிகளின் உரிமையாளர்களுக்கு பணம் எப்படி கிடைக்கிறது என இந்த செய்தித் தொகுப்பில் விளக்குகிறார் செய்தியாளர் ரா.பாலாஜி.

ஐபிஎல் கோப்பை புகைப்படம்
ஐபிஎல் கோப்பை புகைப்படம் (Credits: ETV Bharat Tamil Nadu)

By ETV Bharat Tamil Nadu Team

Published : May 17, 2024, 6:43 PM IST

ஹைதராபாத்: உலகிலேயே கால்பந்துக்கு அடுத்தபடியாக அதிக ரசிகர்கள் கொண்ட இரண்டாவது பெரிய விளையாட்டு கிரிக்கெட் தான். அதற்கு முக்கிய காரணம் இந்தியா என சொல்லலாம். ஏனென்றால், இங்கு ரசிகர்கள் கிரிக்கெட்டை ஒரு விளையாட்டாக மட்டும் பார்க்கவில்லை. இந்தியாவில் கிரிக்கெட் ஒரு மதம் (Religion) எனவும் கூறுவார்கள். அதனால் தான் கிரிக்கெட் இந்தியாவின் பணக்கார விளையாட்டாக உள்ளது. குறிப்பாக ஐபிஎல் தொடர்.

நாம் அனைவரும் இந்த ஐபிஎல் (IPL) தொடரை கண்டுகளித்து வருகிறோம். பிடித்த அணிக்கு நம்மளுடைய ஆதரவை தெரிவிக்கிறோம். ஆனால், இந்த ஐபிஎல்-க்கு பின்னால் எவ்வளவு பணம் புரளுகிறது என்பதை பற்றி என்றைக்காவது சித்தித்து இருக்கிறோமா? அதனை பற்றியதே இத்தொகுப்பு.

இந்தியன் பிரீமியர் லீக் (Indian Premier League) என சொல்லக்கூடிய ஐபிஎல் தொடரை பிசிசிஐ, அதாவது இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் தான் நடத்தி வருகிறது. வருடா வருடம் நடக்கக்கூடிய இந்த ஐபிஎல் தொடரின் மதிப்பு கிட்டத்தட்ட 10 மில்லியன் டாலர், அதாவது இந்திய மதிப்பின்படி 83 ஆயிரம் கோடி ரூபாய்.

டைட்டில் ஸ்பான்சர், கோ – பிரசெண்டிங், அசோசியேட் ஸ்பான்சர்ஷிப், தொலைக்காட்சி மற்றும் ஓடிடியில் ஒளிபரப்பும் உரிமம், டிக்கெட் விற்பனை இப்படி ஐபிஎல்லில் அனைத்துமே பணம்தான். இதில் பொதுவான ஸ்பான்சர்களை 40 சதவீதம் பிசிசிஐயும், மீதமுள்ள 60 சதவீதம் ஐபிஎல் அணிகளும் பிரித்துக் கொள்ளும்.

டைட்டில் ஸ்பான்சர்ஷிப்:ஐபிஎல்-க்கான டைட்டில் ஸ்பான்சர்சிப்பை டாடா குழுமம் (Tata Group) 2028ஆம் ஆண்டு வரை வாங்கியுள்ளது. ஒவ்வொரு ஆண்டுக்கும் தலா 500 கோடி என மொத்தம் 2,500 கோடி ரூபாய்க்கு டாடா குழுமம் வாங்கியுள்ளது.

ஒளிபரப்பு உரிமம்:ஐபிஎல் போட்டிகளை நேரடி ஒளிப்பரப்பு செய்யும் நிறுவனங்கள் ஏலம் மூலம் தேர்வு செய்யப்படும். இதனை 2027ஆம் ஆண்டு வரை ஸ்டார் நிறுவனமும், வியாகாம் நிறுவனமும் சுமார் 48,390 கோடி ரூபாய்க்கு வாங்கியுள்ளன. இதில் கிடைக்கும் லாபத்தை 60:40 என்ற வீதத்தில் பிசிசிஐ மற்றும் ஐபிஎல் அணிகள் பிரித்துக்கொள்வதாக கூறப்படுகிறது. இதன் மூலம் ஒவ்வொரு அணிக்கும் சுமார் 2,000 கோடி ரூபாய் வரை கிடைக்கும்.

ஸ்பான்சர்ஷிப்:இந்த ஸ்பான்சர்ஷிப் என்பது இரண்டு வகைகளாக உள்ளது. ஒன்று ஐபிஎல் தொடருக்காக செய்யப்படும் ஸ்பான்சர்ஷிப், மற்றொன்று ஐபிஎல் அணிகளுக்கான ஸ்பான்சர்ஷிப்.

  • ஐபிஎல்-க்கான ஸ்பான்சர்ஷிப் (Common Sponsorship): இந்த ஸ்பான்சர்ஷிப்பானது பொதுவான ஒன்று. உதாரணத்திற்கு டைட்டில் ஸ்பான்சர்ஷிப், ஒளிபரப்பு உரிமம், ஸ்டேடர்ஜிக் டைம் அவுட் போன்ற பொதுவான ஸ்பான்சர்ஷிப் அனைத்துமே பிசிசிஐ மற்றும் ஐபிஎல் அணிகள் பிரித்துக் கொள்ளும். அதாவது முன்பே கூறியது போல, 40 சதவீதம் பிசிசிஐயும், மீதமுள்ள 60 சதவீத்தை ஐபிஎல் அணிகளும் பிரித்துக் கொள்ளும்.
  • ஐபிஎல் அணிகளுக்கான ஸ்பான்சர்ஷிப்: ஒவ்வொரு அணிகளுக்கும் தனித்தனியாக ஸ்பான்சர்ஷிப் இருப்பர். அந்த ஸ்பான்சர்ஷிப் யார் என்பதை அவர்களது ஜெர்சியில் இருக்கும் நிறுவனங்களின் பெயர் மூலமாக நாம் அதனை அறிந்து கொள்ளலாம். இதன் மூலம் ஒவ்வொரு அணியும் கிட்டத்தட்ட 500 கோடி ரூபாய் வரை லாபம் ஈட்டுகிறது.

டிக்கெட் விற்பனை:டிக்கெட் விற்பனை மூலமாகவும் ஒவ்வொரு அணியும் பணம் சம்பாதித்து வருகிறது. சொந்த மைதானத்தில் நடக்கும் போட்டிக்கான டிக்கெட்டின் விலையை ஐபிஎல் அணியே நிர்ணயிக்க முடியும். அதேபோல், டிக்கெட் விற்பனை (IPL Tickets) மூலம் கிடைக்கக்கூடிய பணத்தை 80:20 என்ற கணக்கில் போட்டியை நடத்தும் ஐபிஎல் அணியும், கிரவுண்ட் அசோஷியேசனும் பிரித்துக் கொள்ளும். உதாரணத்திற்கு, சென்னை - பெங்களூரு அணிகளுக்கு இடையேயான போட்டி சென்னையில் நடந்தால் சென்னை அணி கிரவுண்ட் அஷோசியேசனுடன் பகிர்ந்து கொள்ளும்.

மெர்செண்டைஸ் சேல்ஸ்:ஒவ்வொரு ஐபிஎல் அணிகளும் அவரவருடைய அங்கிகரிக்கப்பட்ட ஜெர்சி, அவர்களது லோகோ பயன்படுத்தப்பட்ட வாட்ச், மொபைல் பேக் கேஸ் உள்ளிட்ட பொருட்களை விற்பனை செய்வதன் மூலமும் பணம் சம்பாதித்து வருகிறது. மேலும், இந்த ஐபிஎல் அணிகளுடைய மெர்செண்டைஸ் ப்ராடக்ட்ஸ் மட்டும் சுமார் ரூ.200 கோடி வரை இருக்கும் என கூறப்படுகிறது.

பரிசுத் தொகை:ஐபிஎல் தொடரின் பரிசுத் தொகை என்பது ஸ்பான்சர்ஷிப்பை பொறுத்து பிசிசிஐ நிர்ணயிக்கிறது. அந்த வகையில், இந்த ஆண்டு சாம்பியன் பட்டத்தை வெல்லும் அணிக்கு ரூ.20 கோடியும், இரண்டாவது இடத்திற்கு (Runner Up) ரூ.13 கோடியும், மூன்றாவது மற்றும் நான்காவது இடத்திற்கு முறையே ரூ.7 மற்றும் ரூ.6.5 கோடியும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. மேலும், ஐபிஎல் அணிகள் சம்பாதிக்கும் லாபத்திலேயே இதுதான் மிகவும் குறைந்ததாக இருக்கிறது.

ஐபிஎல் கோப்பையை வெல்வது தான் ஒரு அணியின் நோக்கமே, அதற்கு இவ்வளவுதானா பரிசுத்தொகை என சந்தேகம் ஏற்படக்கூடும். ஐபிஎல் அணிகளைப் பொறுத்தவரையில், இறுதிப் போட்டிகளில் கிடைக்கக்கூடிய பரிசுத் தொகையானது முக்கியமல்ல. மாறாக ஒரு அணிக்கு கோப்பைதான் முக்கியம். ஏனென்றால், ஒரு அணி கோப்பையை வெல்வதன் மூலம், அந்த அணியின் பிரண்ட் ஸ்பான்சர்ஷிப் அதிகரிக்கிறது. இதன் மூலம் விளம்பர வருவாயும் அதிகரிக்கிறது.

சமீபத்தில் கூட கே.எல்.ராகுலிடம் லக்னோ அணியின் உரிமையாளர் சஞ்சீவ் கோயங்கா பொதுவெளியில் ஆவேசமாக பேசிக் கொண்ட வீடியோ வெளியாகி சர்ச்சையை ஏற்படுத்தியது. அணியின் வெற்றி தோல்வி, ஸ்பான்சர்ஷிப் வருமானத்தையும் பாதிக்கும் என்பதையும் இங்கே குறிப்பிடுவது அவசியமாகிறது.

இதையும் படிங்க:பிளே ஆஃப் சுற்றுக்கு செல்லுமா சென்னை அணி? - சிஎஸ்கே ரசிகர்களுக்கு ஹேப்பி நியூஸ் சொன்ன வர்ணனையாளர் விக்னேஷ்! - CSK Playoff Chance

ABOUT THE AUTHOR

...view details