பாரீஸ்:ஒலிம்பிக் ஆடவர் ஹாக்கி அரையிறுதி சுற்றில், இந்திய அணி, உலக சாம்பியனான ஜெர்மனியுடன் மோதியது. இந்திய நேரப்படி நேற்று (செவ்வாக்கிமை) இரவு 10.30 மணிக்கு இந்த போட்டி தொடங்கியது. பரபரப்பாக தொடங்கிய இந்த போட்டியின் 7வது நிமிடத்தில் இந்திய வீரர் ஹர்மன் பிரிட் முதல் கோல் அடித்தார்.
இதன் மூலம் இந்தியா 1-0 என்ற கணக்கில் முன்னிலை வகித்தது. தொடர்ந்து ஆட்டத்தின் 23வது நிமிடத்தில் கிடைத்த பெனால்டி கார்னர் வாய்ப்பை, ஜெர்மனி வீரர் கன்சாலோ கோல் அடித்தார். இதனால் ஸ்கோர் 1-1 என்ற கணக்கில் சமமானது.
இதனைத் தொடர்ந்து போட்டியின் 27வது நிமிடத்தில் கிடைத்த பெனால்டி ஸ்ட்ரோக் வாய்ப்பை, ஜெர்மனி வீரர் கிரிஸ்டோபர் சரியாகப் பயன்படுத்திக் கொண்டு, அதை கோலாக கன்வெர்ட் செய்தார். இதனால் 2-1 என்ற கணக்கில் ஜெர்மனி முன்னிலை பெற்று இருந்தது.
அடுத்து ஆட்டத்தின் 36வது நிமிடத்தில் இந்திய வீரர் சுக்ஜித் சிங் கு 2வது கோலை அடித்தார். இதனைத் தொடர்ந்து போட்டி உச்சக்கட்ட பரபரப்புக்குச் சென்றது. 3வது கோலை பதிவு செய்து இறுதிப் போட்டிக்குள் நுழைய போவது யார் என்ற ரசிகர்கள் ஆவலுடன் காத்துக்கொண்டு இருந்தனர்.
இந்த நிலையில் 54-வது நிமிடத்தில் ஜெர்மனி வீரர் மார்க்கோ மூன்றாவது கோல் அடித்தார். இதனை சமன் செய்ய கடைசி 6 நிமிடங்களில் இந்தியா கடுமையாகப் போராடியது, இருப்பினும் அதற்கு எந்த பலனும் கிடைக்கவில்லை. இதன் மூலம் 3-2 என்ற புள்ளிகணக்கில் ஜெர்மனியிடம் தோல்வியை தழுவிய இந்தியா, இறுதிப்போட்டிக்கு செல்லும் வாய்ப்பை இழந்தது.
நாளை (வியாழக்கிழமை) காலை 10.30 மணிக்கு நடைபெறும் ஹாக்கி இறுதி போட்டியில் ஜெர்மனி - நெதர்லாந்து அணிகள் பலப்பரீட்சை நடத்த உள்ளன. அதேநேரத்தில் நாளை மாலை 5.30 மணிக்கு நடைபெற உள்ள வெண்கலப் பதக்கத்துக்கான போட்டியில், இந்திய அணி ஸ்பெயின் அணியை சந்திக்க உள்ளது.
இதையும் படிங்க:பாரீஸ் ஒலிம்பிக்கில் இன்று தமிழக வீரர் வீராங்கனைகளுக்கு போட்டி! எப்ப தெரியுமா?