டெல்லி:இந்திய ஹாக்கி அணியின் கோல் கீப்பர் பிஆர் ஸ்ரீஜேஷ், பாரீஸ் ஒலிம்பிக் தொடருடன் சர்வதேச ஹாக்கியில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்தார். இந்நிலையில், அவரை கவுரவிக்கும் வகையில் அவரது ஜெர்சி எண்ணான 16ஆம் நம்பருக்கு ஓய்வு அளிப்பதாக ஹாக்கி இந்தியா அறிவித்துள்ளது.
பாரீஸ் ஒலிம்பிக் ஹாக்கி போட்டியில் இந்திய அணி வெண்கலப் பதக்கம் வென்று வரலாறு படைத்தது. கடந்த 2020 டோக்கியோ ஒலிம்பிக் போட்டியிலும் இந்திய ஹாக்கி அணி வெண்கலம் வென்று இருந்தது. பாரீஸ் ஒலிம்பிக் தொடருடன் சர்வதேச ஹாக்கியில் இருந்து ஓய்வு பெறுவதாக இந்திய வீரர் ஸ்ரீஜேஷ் அறிவித்தார்.
பாரீஸ் மற்றும் டோக்கியோ என இரண்டு ஒலிம்பிக் போட்டிகளிலும் வெண்கலம் வென்ற இந்திய ஹாக்கி அணியில் இடம் பெற்ற வீரர் என்ற சிறப்பையும் ஸ்ரீஜேஷ் படைத்துள்ளார். இந்நிலையில், ஸ்ரீஜேசை கூடுதலாக கவுரவிக்கும் வகையில் அவரது ஜெர்சி எண் 16க்கு ஓய்வு அளிப்பதாக ஹாக்கி இந்தியா அறிவித்துள்ளது.
இது குறித்து பேசிய ஹாக்கி இந்தியா செயலாளர் போலா நாத் சிங், பிஆர் ஸ்ரீஜேஷ் ஜூனியர் ஹாக்கி அணியின் பயிற்சியாளராக அவரது பணியை தொடர்வார். அவரை கவுரவிக்கும் வகையில் இந்திய ஹாக்கி சீனியர் அணியில் 16ஆம் நம்பர் ஜெர்சிக்கு ஓய்வு அளிக்கப்படுகிறது. அதேநேரம் ஜூனியர் ஹாக்கியில் 16ஆம் நம்பர் ஜெர்சிக்கு ஓய்வு அளிக்கப்படவில்லை என்றார்.
ஜூனியர் ஹாக்கி அணியில் அவரைப் போன்ற ஒருவர், ஸ்ரீஜேஷின் 16ஆம் எண் ஜெர்சியை அணிந்து வருவார் என்று தெரிவித்தார். முன்னதாக ஓய்வுக்கு பின்னர் இந்திய ஹாக்கி அணியை பயிற்சியாளராக தொடர்ந்து வழிநடத்த விரும்புவதாக ஸ்ரீஜேஷ் விருப்பம் தெரிவித்து இருந்தார். 2036ஆம் ஆண்டு ஒலிம்பிக் தொடரை இந்தியா எடுத்து நடத்தும் நிலையில், அப்போது இந்திய சீனியர் ஹாக்கி அணியின் பயிற்சியாளராக தான் இருக்க விரும்புவதாக ஸ்ரீஜேஷ் தெரிவித்தார். ஏறத்தாழ 18 ஆண்டுகள் இந்திய ஹாக்கி அணியில் பல்வேறு பொறுப்புகளில் முக்கிய பங்காற்றியவர் ஸ்ரீஜேஷ் என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க:பிரிட்டீஷ் பாடகியுடன் ஹர்திக் பாண்டியா காதலா? யார் அந்த ஜாஸ்மின் வலியா? ரகசியம் உடைந்தது எப்படி? - Hardik Pandya Dating jasmine walia